Monday, April 18, 2011

பார்வைகள்


ஆற்றில் விழுந்த அழகி


அழகி ஒருத்தி ஆற்றில் அடித்துச் செல்லப்படும் போது
''நமக்கென்ன''என்று பாராமல் இருப்பவன் மனித மிருகம்.
''ஆபத்து,ஆபத்து!''என்று அலறுபவன் பொது ஜனம்.
''ஐயோ பாவம்''என்று முணுமுணுப்பவன் அனுதாபி
''ஆண்டவனே, அவளைக் காப்பாற்று'' என்பவன் பக்தன்.
''அற்புதமான அழகு''என்று அந்த நிலையிலும் ரசிப்பவன் கவிஞன்.
''பெண்களும் நீச்சல் கற்க வேண்டும்''என்பவன் சீர்திருத்தவாதி.
''ஆற்றில் குளிக்கக்கூடப் பாதுகாப்பில்லை''என்பவன் எதிக்கட்சிக்காரன்.
''எவ்வளவு இழப்பீடு வழங்கலாம்''என யோசிப்பவன் ஆளும் கட்சிக்காரன்.
காப்பாற்றும் முயற்சியில் உயிர் துறப்பவன் தியாகி.
ஆற்றில் இறங்கி,காப்பாற்றி,தன வழியே செல்பவன் கர்மயோகி.

நன்றி; தென்றல்

Sunday, March 13, 2011

Moral Values

ஞாநி அவர்களிடம் இருந்து,
எங்கள் சிந்தனைக்காக!






(www.sinnakuddy1.blogspot.com என்ற வலைப்பூவில் இருந்து இந்த நிகழ்ச்சி எடுத்து வரப்பட்டது.நன்றி; சின்னக்குட்டி)

Monday, February 21, 2011

மனதின் படிக்கட்டுக்கள்



’மனித தேவைகளே அவனின் நடத்தையைத் தீர்மானிக்கின்றன’ என்கிறார் maslow என்ற மேலைத் தேய உளவியலாளர்.முதலில் வருவன அவனின் அடிப்படைத் தேவைகள். அது பூர்த்தியாகும் பட்சத்தில் அவனது தேவைகள் அடுத்த கட்டமான பாதுகாப்பு, நின்மதி போன்றவற்றை நாடுகின்றது.அதற்கடுத்ததாக அன்பு,உறவு,குடும்பம்,நட்பு போன்றவற்றை மனம் இயல்பாக நாடுகின்றது.

இவ்வாறே ஒவ்வொன்றும் பூர்த்தியாகுமிடத்து அடுத்த கட்டத்தை நோக்கி மனம் நகர்கிறது.இறுதியில் அது உயர்வான மனநிறைவில் வாழ்வைப் பூரணப் படுத்துகிறது.அது நிறைவேறும் வரை மனம் ஓடிக் கொண்டே இருக்கும்.போராட்டமும் தொடர்ந்த வண்ணமாகவே இருக்கும் என்கிறது உளவியல்.

ஒரு மனிதன் எந்தப் படிநிலையில் இருக்கிறானோ அந்தத் தேவைகளை மையமாக வைத்து அவனது வேட்கைகள்,
விருப்புவெறுப்புகள்,தொடர்புகள்,நடைமுறைகள்,சிந்தனைகள்,கருத்துலகம்,பார்வை,நோக்கம்,திருப்தி முதலியன அமைகின்றன.

நீங்கள் எந்தக் கட்டத்தில் இப்போது நிற்கிறீர்கள்?



\-------------------------------7.உயர் திறன்,மனநிறைவு,
\-----------------------------6.ரசனை,கலையாக்கம்,அழகுணர்ச்சி
\--------------------------5.அறிவாற்றல்,தெளிதல்,ஞானம்
\------------------------4.மானம்,கெளரவம்,மதிப்பு
\----------------------3.அன்பு,உறவு,
\------------------- 2.பாதுகாப்பு,நின்மதி
\-----------------1.உடலியற் தேவைகள்,உணவு,உடை,வீடு,



மேலே உள்ளவை நம்முடைய படிநிலைத் தேவைகள்.



நம்மைச் சுற்றி உள்ள விரிவடையும் வட்டங்கள் கீழே உள்ளவை.


1.அகங்காரம்.
|
2.குடும்பம்.
|
3.கூட்டுக் குடும்பம்.
|
4.சாதி,குலம்.
|
5.பிரதேசம்.
|
6.இனம்,கலாசாரம்.
|
7.தேசம்.
|
8.மதம்.
|
9.மானுடம்.
|
10.பரமாத்மா.


நன்றி;பேராசிரியர். தயா.சோமசுந்தரம்.’தன்னாத்மாவைத் தேடி அலையும் மனிதன்’,தலைவர்,உளமருத்துவத்துறை,யாழ்.பல்கலைக்கழகம்.1994.

Monday, February 7, 2011

நோபல் பரிசின் பின்னே...


மார்கழி மாதம் பத்தாம் திகதி நோபல் சமாதானப் பரிசு வழங்கப் படும் போது எல்லோருக்கும் அதன் ஸ்தாபகர் அல்பேட் நோபலின் பெயர் தான் ஞாபகம் வரும்.ஆனால் அவருக்குப் பின்னே ஒரு பெண்மணி இருந்தாள்.

பெர்த்தா. ஸ்டெட்னர் என்ற அந்தப் பெண் வெடி மருந்துத் தயாரிப்பாளரான நோபலின் கீழே வேலை பார்த்தாள்.பின்னர் ரஷ்யாவில் தன் கணவருடன் தங்கியிருந்த போது துருக்கிக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்த போரின் கொடுமையைக் கண்ணால் கண்டார்.சமாதான இயக்கங்களில் ஈடு பட்டு நோபலையும் ஈடுபாடு கொள்ளச் செய்தார்.பெரும் ஆராய்ச்சிகள் செய்து ‘லே டவுன் யுவர் ஆர்ம்ஸ்’(உங்கள் ஆயுதங்களைக் கீழே போடுங்கள்)என்ற நாவலை எழுதினார்.போரின் கொடுமைகளை விபரித்த அந்த நாவல் நோபலை மிகவும் கவர்ந்தது.

இருபது ஆண்டுக் காலம் பெர்த்தாவோடு சகோதர நண்பரைப் போலp பழகிய நோபல் தான் இறக்கின்ற போது சமாதானத்துக்கான நோபல் பரிசை ஏற்படுத்தினார்.

(நன்றி; அறிவுக்கு ஆயிரம் வாசல்,ரா.கி.ரங்கராஜன்).

Friday, January 14, 2011

தத்துவத்தின் தார்ப்பரியமும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும்


தமிழன் வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்தது மாத்திரமல்ல பிரபஞ்சத்தின் ரகசியம் பற்றிய தேடலுக்கும் தன் வாழ் நாளில் இடம் ஒதுக்கி இருந்திருக்கிறான்.உலகம் பஞ்சபூதங்களால் ஆனது என்பதைக் கண்டறிந்தது மாத்திரமல்லாது;உடலும் அவ்வண்ணமே பஞ்சபூதங்களால் ஆனது என்பதை கண்டறிந்து சொன்னதன் காலம் தொல்காப்பியரின் காலமாகும்.

தொல்காப்பியர் அதனை “நிலம்,தீ,நீர்,வளி,விசும்போடைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” (86) என்று குறிப்பிடுகிறார்.புறநானூற்றின் 87வது பாடல் “அனுச்செறிந்த நிலனும் அந் நிலத்தின் ஓங்கிய ஆகாயமும் அவ் ஆகாயத்தைத் தடவி வரும் காற்றும்,அக் காற்றின் கண் தலைப்பட்ட தீயும்,அத் தீயோடு மாறு பட்ட நீருமென ஐவகைப் பெரிய பூதத்தினது தன்மை போல”என்று குறிப்பிடும்.

இவ் ஐம் பெரும் பூதங்களை அடிப்படையாகக் கொண்டு ஐம் புலன்களும் அவற்றை நுகரும் பொறிகளும் உண்டாகின்றன என்று பரிபாடல் குறிப்பிடுகின்றது.

“சுவைமை யிசைமை தோற்ற நாற்ற மூ
றவையு நீயே யடு போ ரண்ணால்
அவையவை கொள்ளுங் கருவியு நீயே
முத்தியாங் கூறிய வைந்தனுள்ளும்
ஒன்றனிற் போற்றிய விசும்பும் நீயே
இரண்டி ணுணருந் வளியு நீயே
மூன்றி னுணருந் தீயு நீயே
நான்கி னுணரு நீரு நீயே
ஐந்துடன் முற்றிய நிலனு நீயே”.

இதே விழிப்புணர்வு சங்கமருவிய காலத்திலும் நிலைத்து நின்றிருக்கின்றது என்பதற்குத் திருக்குறளில் வரும் “சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் .... “(குறள் 106) என்பதும்;கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்....” (குறள் 90)என்ற குறள் அடையாளம் கூறி நிற்கிறது.

இப் பூமியில் இருக்கும் பஞ்சபூதத்தின் அனைத்து வடிவங்களாலும் உருவானதே மனித உடலும் என்பதை சட்டமுனி ஞானம் சிறப்பாக விதந்துரைக்கும். அது நம் உடலானது பஞ்சபூத மயமானது என்பதையும் அண்டத்தில் இருக்கும் ஆற்றலுக்கும் நாம் கொண்டிருக்கும் உடலுக்கும் தொடர்பு இருப்பதால் அண்டம் வேறு பிண்டம் வேறு என்னும் பாகுபாடு இயற்கை நியதியில் இல்லை என்பதை கீழ்வருமாறு உரைக்கிறது.

“அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்து தான் பார்க்கும் போதே”

என்கிறது.நம்முடைய கால்கள் பூமியை எப்போதும் தொட்ட வண்னமாக உளளன. மூச்சுக் காற்றைக் கணம் தவறாது சுவாசித்தவாறே இருக்கிறோம்.மூச்சினை நாம் நிறுத்துகின்ற போது உடல் வெறும் சடலமாகி விடுகிறது. அப்படி இருக்கும் போது இந்த இயற்கையில் இருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று எவ்வாறு சொல்லிக் கொள்ள முடியும்? அவ் இயற்கை எம்மைத் தன்னோடு தொடர்பறா வண்ணம் பிணைத்து வைத்திருக்கிறது.

அந்த இயற்கையையே நாம் கடவுள் என்கிறோம்; விதி என்கிறோம்.பிறக்கின்ற போது நாம் விட்ட முதல் மூச்சில் எழுதப் பட்டு விட்டது நம் வாழ்வு.பிணைக்கப் பட்டு விட்டது நம் சரீரம்.சோதிடம் கூட அதிலிருந்து கணிக்கப் படுவது காண்க.

இந்தப் பின்னணியை நன்கு அறிந்து கொண்டு அது பற்றி ஆராய்ந்தவர்களாக சித்தர்களும் சான்றோர்களும் விளங்கி இருக்கிறார்கள். அது பற்றிய சிந்தனைகளுக்கு தம் வாழ்நாளை ஒதுக்கி இருக்கிறார்கள்.அதிலிருந்து தான் அவர்கள் ஆண்ம தத்துவத்தைக் கண்டறிந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.அவர்கள் தாம் வேறாகவும் தம் உடல் வேறாகவும் கண்டு தெளிந்திருக்கிறார்கள்.அதனை அவர்கள் தெளிவாகக் கண்டு கொண்டதனால் தாம் வெளியில் நின்றவாறே தம் உடலை அது புரியும் செயலை வேடிக்கை பார்க்கும் வல்லபம் கை வந்திருக்கிறது.

அதுவே வளர்ந்து பின்னாளில் தியானமாக உருவெடுத்திருக்கிறது.

அவர்கள் உடம்பை எவ்வாறெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்று சின்னதாகச் செய்த சோதனையில் சுவாரிசமான விடைகள் பல வந்து சேர்ந்தன.‘ஊன் பொதி’ என்றும்(120) சஞ்சாரப் பிரேதம்’(60)என்றும் விவேக சிந்தாமணி உடலை வர்ணிக்கிறது.’ஊன் தடி’ என்று புறநானூறு (74) கூறுகிறது.’என்பு தோல் போர்த்த உடம்பு’ என்கிறது குறள்,’காற்றடைத்த பை’ என்பர் சித்தர்.’ஊன் நிறைந்த காயம்’ என்றும்; ’மலசலங்கள் பாயும் புழுக் கூடு’ என்றும் பத்திரகிரியார் என்ற சித்தர் கூறுகிறார்.’ஊத்தைச் சடலம்’ என்றும்;’ஐந்து பேர் சூழ்ந்திடும் காடு’ என்றும் கடுவெளிச் சித்தர் பார்க்கிறார்.’ஆபாசக் கொட்டில்’ என்பார் பட்டினத்தார்.எம்மோடு வாழ்ந்த கண்ணதாசன் அதனை இன்னும் பலவாறாக வர்ணிப்பார். இமயமலைக் காடுகளில் தேடினால் இன்னும் பல அற்புதங்கள் கிட்டும்.ஞானியர் பலர் ஞான நிஷ்டையில் அங்கிருக்கிறார்கள்.ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்மீகத் தேடல் நமக்குள்ளும் ஆரம்பமாகிறது.

இப்படிப் பலரும் பலவாறு உடலைப் பாக்கின்ற போதும்;உடலை நாம் தற்காலிகமான ஒன்றாக ஆத்மாவைத் தாங்கி நிற்கும் ஒரு கவசமாக நாம் பார்ப்பதில்லை.ஆண்மா ஒன்றே நிலையானது என்பதையும் பிணி, மூப்பு, சாக்காடு என்பவற்றால் அழியக் கூடியது இந்த உடல் என்றும்;உயிர் என்ற ஒன்றே பல்வேறு தோற்ற வேறுபாடுகளைக் கொண்ட உடல் என்ற சட்டையைப் போட்டிருக்கிறது என்பதையும் நாம் கண்டு கொண்டு விட்டால் ஆன்மாவுக்கு உணவளிக்கின்ற பிரதான விடயங்களில் நாம் ஈடுபடக் கூடும்.

அந்த நிலையை நாம் எட்டி விட்டால் உலகில் உள்ள சகல ஜீவராசிகளையும் ஒன்றாக நாம் கருத வரும்.எல்லோரிடமும் எல்லாவற்றிலும் நேசம் பிறக்கும்.சாத்வீகமும் சமாதானமும் நம்மில் நிலவும்.புலன்கள், தற்காலிகங்களைத் தள்ளி வைத்துப் பார்க்கப் பழகும்.உலக நாடகத்தைத் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்போம்.இயற்கையின் பாசையை மொழி பெயர்ப்பது கூட சாத்தியப் படும்.பிரபஞ்சத்தின் ரகசியம் புரியும்.அன்பு மயமான சேவையில் மனம் நிறைவு கொள்ளும்.பற்றுக்களோடு பற்றற்ற வாழ்வு சாத்தியப் படக் கூடும்.நிரந்தர செல்வம் எதுவென்று நாம் கண்டுணர்ந்து வாழ்தலும் வசப்படக் கூடும்.

ஒரு முறை வேர்களைத் தேடி என்ற வலைப்பூவில் ஒரு சிறு சம்பவம் ஒன்று சொல்லப் பட்டிருந்தது. அதனை அப்படியே இங்கே தருகிறேன்.

“இளந்துறவி தன் குருவிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.

‘குருவே நான் புகை வண்டியில் இடம் கிடைக்காது பாதையில் அமர்ந்து வந்தேன்.அப்போது என்னைக் கடந்து சென்றவர் என்னை மிதித்து விட்டார்.கோபம் கொண்ட நான் அவரைத் திட்டி விட்டேன்.கோபத்தை அடக்க முயன்றும் என்னால் இயலவில்லை ஏன்? என்றார்.

குரு கூறினார்;


நீ வேறு; உன் உடல் வேறு என்ற எண்ணம் எப்போது உனக்குத் தோன்றுகிறதோ அப்போது உன்னால் முதிர்ந்த நிலை அடைய முடியும் என்றார்”.


உண்மை தானே!

எல்லோருக்கும் என் மனமார்ந்த தைத் திருநாள் வாழ்த்துக்கள்!

(குறிப்பு;-வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட விதம் இது.உங்களுக்கு இதில் மாறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் இருந்தால் தயங்காமல் எனக்கு அறியத் தாருங்கள்.அது நான் வளர உதவும்)

(தமிழ்முரசு அவுஸ்திரேலியாவுக்காக எழுதியது.பிரசுரம் 17.01.11)

Sunday, January 2, 2011

ஜைனம் சொல்கிறது




அறிவெனப் படுவது துன்பம் துடைத்தல்!
செறிவெனப்படுவது மும்மையும் செறிதல்!
ஆண்மை எனப் படுவது ஐம்புலன் வெல்லல்!
கேண்மை எனப் படுவது கெட்ட இடத்து உதவல்!
அருமை எனப்படுவது அறநெறி வழுவாமை!
பெருமை எனப்படுவது பிறன் இல் விளையாமை!
அறம் எனப் படுவது ஆருயிர் ஓம்பல்!
உறவெனப் படுவது உற்றுழி நிற்றல்!
வாய்மை எனப் படுவது வருந்தாது உரைத்தல்!
தூய்மை எனப் படுவது உள்ளத் தூய்மை!

-சீவ சம்போதனை என்ற ஜைன சமய நூலில் சிரோணிக மகாராசன் கூறும் அறிவுரை இது.-

ஆதாரம்; மு.அருணாசலம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு - பதினாறாம் நூற்றாண்டு’

நன்றி; அறிவுக்கு ஆயிரம் வாசல்; ரா.கி.ரங்கராஜன்.

Tuesday, December 28, 2010

சேவையின் தொடக்கம்



மக்களிடம் போ,

அவர்களுடன் வசி,

அவர்களிடம் கற்றுக் கொள்,

அவர்களை நேசி,

அவர்களுக்குப் பணி செய்,

அவர்களுடன் சேர்ந்து திட்டமிடு,

அவர்களுக்கு என்ன தெரியுமோ

அதிலிருந்து தொடங்கு,

அவர்களிடம் என்ன இருக்கிறதோ

அதை வைத்து எழுப்பு!

அண்மையில் வாசிக்கக் கிட்டிய ‘அறிவுக்கு ஆயிரம் வாசல்’ என்ற ரா.கி.ரங்கராஜன் அவர்களுடய புத்தகம் ஒன்றிலிருந்து;

மேலதிக குறிப்பு; அவ் வாசகம் பிலிப்பைன்ஸ் நாட்டு கிராமமொன்றின் சுவரொட்டியில் காணப்பட்ட வாசகம் என்ற குறிப்புக் அப்புத்தகத்தில் காணப் படுகிறது.

எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.