Friday, July 16, 2021

சந்தோஷம் என்பது.....


 'உங்கள் கணவர் உங்களைச் சந்தோஷமாகப் பார்த்துக் கொள்கிறாரா?’ - சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

அருகில் இருந்த கணவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். காரணம் மனைவி அவரிடம் எந்த விதமான புகார்களும் சொன்னதில்லை. அவர் சந்தோஷமாகவே இருந்தார்.

ஆனால், அந்த மனைவி தெளிவாக, ’ இல்லை, கணவர் என்னைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை. என்னைச் சந்தோஷப் படுத்தியதுமில்லை; ஆனால் நான் சந்தோஷமாகவே இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது அல்ல; அது என்னைச் சார்ந்தது. நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப் பட்ட விஷயம்.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பதென்பது என் முடிவு. அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால்; இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால்; இன்னென்ன தருணங்களில் தான் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால் நான் பெரும் பிரச்சினையில் இருக்கிறேன் என்று பொருள்.

நம்மைச் சுற்ரியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே.... அது ஒரு நீண்ட பட்டியல்.

‘என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பதென்பது நான் எடுத்த முடிவு. நிறைய இருந்தாலோ குறைவாக இருந்தாலோ சந்தோஷம் குறைவதில்லை. வெளியே சென்றாலோ வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ பணக்காறியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை.

‘திருமணத்திற்கு முன்னும் நான் சந்தோஷமாக இருந்தேன். பின்னும் சந்தோஷமாக இருக்கிறேன். என்னைப் பற்றி எனக்கே நல்ல அபிப்பிராயம் இருப்பதால் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

என் வாழ்க்கையை நான் விரும்பக் காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமாக இருப்பதால் அல்ல; நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால். நானே என் சந்தோஷத்துக்குப் பொறுப்பு.

இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும் போது, என்னைச் சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் இருந்து நீக்குகிறேன். இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. அதனால் தான் எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது’ என்றார்.

நம்மை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு நமக்கு உரியது. அது மழை வெய்யிலிலோ, உடல்நலமின்மையிலோ, பணத்திலோ மற்றவரிலோ தங்கி இல்லை.

.நம்  சந்தோஷம் நம் வசமே உள்ளது.

( சிட்னியில் கொரோனா பேரிடர் அதிகரித்துக் கொண்டும் போகும் இத் தறுவாயில்; எல்லோரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கப் பணிக்கப் பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் வட்ஸப் பில் வந்த இந்தப்பதிவை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.

Stay home.  Be safe!

Saturday, July 3, 2021

சில பொன் மொழிகள்

 


மிகச் சிறிய விடயங்களை ஆழமாக அறிந்து கொள்பவனே நிபுணன் ஆகிறான்.


நற்குணங்களைப் பற்றி சிறந்த மனிதன் சிந்திக்கிறான். சாதாரண மனிதன் தன் செளகரிகங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.


தன் பிள்ளைகளுக்கு பிறர் மீது அன்பு செலுத்தக் கற்றுக்கொடுப்பதன் மூலமாக தாய் தன் கடமையைச் செய்து முடிக்கிறாள்.


ஒரு மனிதனுடய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடய எண்ணங்களையும் செயல்களையும் அவதானிதால் போதுமானது. 


ஒரு நூலகத்தையும் தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவனுக்கு வேறு எதுவும் தேவை இல்லை.


கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப் பட வேண்டாம். அந்த வாய்ப்பைப் பயன் படுத்தி நன்றாகக் குளித்து விட்டு வா.

whatsapp இல் வந்தவை. (4.7.21.)

Monday, August 31, 2020

தண்ணீரின் போதனை

 


வட்ஸப் இல் வந்த இந்த செய்தி அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் கடின சூழல்களுக்கு; சில சந்தர்ப்பங்களில் கடினமான குண இயல்புகளை கொண்ட மனிதர்களை எதிர் கொள்ளுகின்ற போது அவற்றை இலகுவாகக் கடந்து செல்ல வழிகாட்டுகிறதல்லவா?

சில வேளைகளில் யாரோ முகம் தெரியாத ஒருவர் சிந்திவிட்டுப் போகும் ஒரு புன்னகை போல, சில காலை வணக்கச் செய்திகளும் மனிதர்களை; சந்தர்ப்பங்களை; எதிர்பாரா சில நிகழ்வுகளை எதிர் கொள்ள  திராணிகளை தந்து போகின்றன.

ஏதோ ஒரு விதமாக இங்கு வந்து சேரும் உங்களுக்கும் அது சில வேளைகளில் காயங்களுக்கு மருந்தாகலாம் அன்றேல் நோவுக்கு ஒத்தடம் ஆகலாம்.

நாளையும் சூரியன் உதிக்கும்!

Monday, June 8, 2020

திருப்திHappiness is a inner joy... It is a delicate balance between 'what i want & what i have'......

Tuesday, December 10, 2019

திணை விதைத்தவன் திணை அறுப்பான்


ஓர் உண்மைக் கதை!

ஸ்கொட்லாண்ட் நாட்டில் ஃளெமிங் என்று ஓர் ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் அவர் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, உதவி கோரி ஒரு குரல் அருகில் இருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.

ஃளெமிங் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு, குரல் கேட்ட திசை நோக்கி ஓடினார். அங்கே ஒரு சிறுவன் புதை குழியில் சிக்குண்டு வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

நல்லவேளையாக ஃளெமிங் அச்சிறுவனைக் காப்பாற்றினார்.

அடுத்தநாள், நேர்த்தியாக உடையணிந்த ஒரு பிரபு வண்டியில் இருந்து இறங்கி வந்து ஃளெமிங்கிடம் நேற்று அவர் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தான் என்று அறிமுகம் செய்து கொண்டார். மேலும், மகனின் உயிரைக் காப்பாற்றியதனால் உங்களுக்கு ஏதாவது கொடுக்க விரும்புகிறேன் என்று கூறினார். அதற்கு ஃபிளெமிங் எதையும் வாங்கிக் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார். அப்போது ஃளெமிங்கின் மகன் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தான்.

அவன் உங்கள் மகனா என்று கேட்டார் பிரபு.

ஆம் என்று பெருமையுடன் கூறினார் ஃளெமிங்.

அப்படியானால் சரி. நாம் இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம். என் மகனுக்குக் கிடைக்கும் அதே மிகச் சிறந்த கல்வியை உங்கள் மகனுக்கும் அளிக்கிறேன். அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாம் இருவரும் பெருமைப்படும் படியாக அவன் இருப்பான் என்றார்.

இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. பிரபு சொன்னது மாத்திரமன்றி அதைச் செய்தும் காட்டினார். விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளியில் படித்தான்.

லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் முழுவதும் பயன் படும் பென்சிலின்  மருந்தைக் கண்டுபிடித்த சேர். அலெக்ஸ்ஸாண்டர் ஃபிளெமிங் ஆனார்.

பல வருடங்கள் கழிந்த பின் பிரபுவின் மகன் நிமோனியாவால் பாதிக்கப் பட்ட போது இந்த பென்சிலின் மருந்தே அவரைக் காப்பாற்றியது.

அந்தப் பிரபுவின் பெயர் லோர்ட். ரண்டோல்ப். சேர்ச்சில்.

அவரது மகன் சேர். வின்ஸ்டண்ட் .சேர்ச்சில்.

திணை விதைத்தவன் திணை அறுப்பான்.

நம்புங்கள்; நல்லது செய்பவனுக்கு உடனேயோ பின்னரோ நல்லதே நடக்கும்.

பணம் தேவை இல்லை என்பது போல் வேலை செய்.
யாரும் உன்னைப் புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்.
யாரும் உன்னைப் பார்க்கவில்லை என்பது போல் நடனமாடு. 
யாரும் உன்னைக் கேட்கவில்லை எனபது போல் பாட்டுப்பாடு. 
சொர்க்கத்தில் இருப்பது போல் பூமியில் வாழ்!

இறுதியாக ஐரிஷ் வாழ்த்து உங்கள் எல்லோருக்குமாக....

* உங்கள் கைகளில் செய்வதற்கு எப்போதும் ஒரு வேலை இருக்கட்டும்.
* உங்கள் பணப்பையில் எப்போதும் ஓரிரு காசுகள் புழங்கட்டும்.
* உங்கள் ஜன்னலோரம் எப்போதும் சூரியன் பிரகாசிக்கட்டும்.
* ஒவ்வொரு மழைக்குப் பின்னும் வானவில் தோன்றட்டும்.
* நண்பன் ஒருவனின் கைகள் எப்போதும் உங்களுக்கருகில் இருக்கட்டும்.
* இயற்கையும் இறைவனும் உங்கள் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும். 

Friday, November 29, 2019

பெண் என்பவள்....


மனைவியர் இளய வயதில் கணவனுக்குத் தலைவியாகவும், மத்திய வயதில் துணைவர்களாகவும், முதிய வயதில் செவிலியராகவும் விளங்குகின்றார்கள்.
                                  - பிரான்சிஸ். பேகன். -

தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை எவ்வாறு உருவாக்குகிறார்களோ அவ்வாறே மனிதர்கள் அமைகிறார்கள்.
                                  - எமர்சன் -

‘புதுமலரல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்;
தள்ளாடி விழும்மூ தாட்டி
மதியல்ல முகம வட்கு
வறள் நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக் கின்பம் நல்கும்?
இருக்கிறாள் என்ப தொன்றே!
                             - பாரதி தாசன், குடும்பவிளக்கு, முதியோர்காதல்.-