Sunday, May 9, 2010

கர்ப்போபநிடதம்


உபநிடதங்கள் வேதங்களுக்குப் பிற்பட்டவை.வேதங்களின் சாரம் அது.இந்து சமய தத்துவங்களின் மூலம் அவையே.அதில் இடம் பெற்றிருக்கிற ஆத்மா உடலைப் பெறும் நுணுக்கம் பற்றிய செய்தி ஆச்சரியத்தைத் தருவதாக இருந்தது.


ஆத்மா உடலைப் பெறும் நுட்பம் பற்றிக் கர்ப்போபநிடதம்.


எப்போது ஒரு மனிதனுக்கு விஷய போகத்துக்குரிய திரவியங்கள் உண்டாகின்றனவோ அப்போது அவற்றின் கூட்டுறவின் நல்ல குணத்தால் ஆறு விதமான ரசங்கள் தோன்றுகின்றன.ரசத்தில் இருந்து ரத்தம்,ரத்தத்தில் இருந்து மாமிசம்,மாமிசத்தில் இருந்து கொழுப்பு,கொழுப்பில் இருந்து நரம்புகள்,நரம்புகளில் இருந்து எலும்புகள் எலும்புகளில் இருந்து ஊன்,ஊனில் இருந்து சுக்கிலம் - இப்படி ஏழு தாதுக்களால் ஆனது சரீரம்.

சுக்கிலமும் சோணிதமும் சேர்வதால் கர்ப்பம் உண்டாகிறது.அதனை இயக்குமிடம் இருதயம்.இதயத்தினுள் ஒரு அக்கினி உள்ளது.அதில் பித்தமும் பித்தத்திலிருந்து வாயுவும் தோன்றுகின்றன.அந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தை அடைகிறது.இது மக்களை ஆழும் இறைவனுடைய நியதி.

ருதுகால சம்போகத்தால் ஓரிரவு கழிந்ததும் கருவானது கலங்குகிறது.ஏழு இரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது கடினமாகிறது.இரண்டு மாதங்களில் தலை தோன்றுகின்றது.மூன்று மாதங்களில் பாதங்களின் பிரதேசம் தோன்றுகின்றது.நாலாவது மாதத்தில் மணிக்கட்டு, வயிறு, இடுப்பு முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.ஐந்தாவது மாதத்தில் பின் புறம்(மூங்கில் போன்ற முதுகு),எலும்பு உண்டாகிறது.ஆறாவது மாதத்தில் வாய், மூக்கு, கண்கள், காதுகள் உண்டாகின்றன.ஏழாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது.எட்டாவது மாதத்தில் எல்லா லட்சணங்களும் பூர்த்தியாகின்றன.

தந்தையின் வீரியம் அதிகமாயிருந்தால் புருஷனாகவும்; தாயின் வீரியம் மேம்பட்டிருந்தால் ஸ்திரியாகவும்; இரண்டும் சமமானால் அலியாகவும் ஆகிறது.மனக் கலக்கத்தால் குருடர்களாகவும் முடவர்களாகவும்,கூனர்களாகவும்,குள்ளர்களாகவும் பிறக்கிறார்கள்.ஒன்றுக்கொன்று வாயுவால் பீடிக்கப் பட்டு சுக்லம் இரண்டு பட்டால் இரட்டைப் பிள்ளைகள் பிறக்கிறார்கள்.

பஞ்ச பூத வடிவான சரீரம் சமர்த்தியமுடையதாகும் போது ஐந்து ஞானேந்திரியங்களும் புத்தியும், அதனால் கந்தம்,ரசம் முதலியவற்றை அறியும் திறனும் உண்டாகின்றன.அப்பொழுது அந்த ஜீவன் அழியாத அக்ஷரமாகிய ஓங்காரப் பொருளைச் சிந்திக்கிறான்.அந்த ஓரெழுத்தை உணர்ந்தும்(ஓம்- நான் ஒரு ஆத்மா) பஞ்சபூதங்கள்,மனம் புத்தி, சம்ஸ்காரம் என்ற எட்டுப் பிரகிருதிகளும் அவற்றின் பதினாறு விகாரங்களும் தேகத்தில் அதை உடைய தேகி ஆகிய ஜீவனுடையவை ஆகின்றன.

தாயார் உண்டதும் பருகியதும் தாயுடன் இணைந்த நாடிகளில் பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணன் திருப்தியடைகிறது.பிறகு ஒன்பதாவது மாதத்தில் எல்லா லக்ஷ்ஷணங்களும் ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் பரிபூரண நிலையை எய்துகின்றன.அப்போது அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம் உதிக்கிறது.தான் செய்த புண்ணியச் செயல்களையும் பாவச் செயல்களையும் உணர்கிறது.

..........திரும்பத் திரும்ப பிறந்தும் இறந்துமாயிற்று.இனி நான் பாவத்தைப் போக்குவதும்;கருமப் பயனில் இருந்து விடுதலை அளிப்பதுமாகிய சாங்கிய (ஞான) யோகத்தை அப்பியாசிக்கப் போகிறேன்;சனாதன ப்ரம்மத்தைத் தியானிக்கப் போகிறேன் என்றிவ்வாறு எண்ணுகிறது.

பிறகு மாய உலகில் பிறந்ததும் இயந்திரத்தால் பீடிக்கப் பட்டவனைப் போல விஷ்னு மாயா வாயுவால் தொடப்பட்டு; நினைவிழந்து; பிற பிறப்பையோ புண்ணிய பாவச் செயல்களையோ எதையும் அறிவதில்லை.

இவ்வாறு பிப்பிலாத மகரிஷியால் கர்ப்போபநிஷத்தில் உபதேசிக்கப் பட்டிருக்கிறது.

(உபநிஷத்ஷாரம்; உரையாசிரியர்- அண்ணா - சிறி ராமகிருஷ்னமடம் வெளியீடு - 16.08.1989 பக்; 155 - 160,163)