Sunday, November 20, 2011

ஓர் அனுபவக் குறிப்பு
அப்போது நான் வெளிநாட்டின் பிரபல பல்கலைக் கழகம் ஒன்றின் வியாபார நிர்வாகம் கற்கும் மாணவன்.

என் கல்விக் காலத்தின் இறுதி வருடத்தில் ஒரு முறை என் பல்கலைக்கழக விரிவுரை மண்டபமொன்றில் வகுப்பின் இறுதியில் பதில் சொல்வதற்கான கேள்விக் கொத்தொன்று தரப் பட்டது.அதன் கடசிக் கேள்வி இந்த விரிவுரை மண்டபத்தைத் துப்பரவு செய்பவரின் பெயர் என்ன என்பதாகும்.

இது ஒரு பகிடிக்குரிய கேள்வியாகவே எனக்குத் தோன்றியது.நான் அந்தப் பெண்மணியைப் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.அவள் உயரமான கறுத்த தலை முடியைக் கொண்ட 50 களில் இருப்பவள்.ஆனால் எனக்கெப்படி அவளின் பெயர் தெரியும்?

அதனால் அந்தக் கடசிக் கேள்விக்கு விடையளிக்காமல் விடைத் தாளைப் பேராசிரியரிடம் கையளித்தேன்.இலேசான புன்னகையோடும் மிக மெல்லியதான அலட்சியத்தோடும் அந்தக் கேள்விக்கும் புள்ளிகள் உண்டா என கேட்டேன்.என்னுடய புன்னகையிலேயே என்னுடய விடையும் உறுதியாக ஒழிந்திருந்ததை பேராசிரியர் கண்டிருக்கக் கூடும்.

நிச்சயமாக! - சொன்னார் பேராசிரியர்.

உன்னுடய தொழில் வாழ்வில் நீ பலரைச் சந்திக்கக் கூடும்.ஆனால் உன்னோடு வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் முக்கியமானவரே!ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவரே!! என்பதை ஒரு போதும் மறக்காதே!அவர்களால் கட்டியெழுப்பப் பட்டிருக்கும் கோபுர உச்சியில் உன்னை அவர்கள் நிறுத்தி இருக்கிறார்கள்.

அவர்கள் உன் கவனத்துக்கு உரித்தாக வேண்டியவர்கள்!
உன் கவனிப்புக்கு உரித்தாக வேண்டியவர்கள்!

ஆக நீ செய்ய வேண்டியதெல்லாம் காணுகின்ற பொழுதுகளில் ஒரு புன்னகை.
மேலும்,பெயர் கூறி அழைத்து நலமா என்றொரு விசாரிப்பு.

இன்று நான் பெரு நிறுவனம் ஒன்றின் வெற்றி பெற்ற நிர்வாகி.வெற்றிக்கான அந்த அடிப்படைப் பாடத்தை நான் இங்கிருந்து தான் பெற்றுக் கொண்டேன்.

மின் தபாலில் வந்த ஒரு குறிப்பு.
நன்றி பிரதீப்.

Monday, September 5, 2011

உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள்மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுகின்ற ஏழு சக்கரங்கள், உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இந்த ஏழு சக்கரங்களும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஏழு சக்கரங்களையும் அவை கட்டுப்படுத்தும் உறுப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்


மூலாதாரம்

முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.

சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள்,சிறுநீர்ப்பை,முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது

ஸ்வாதிஷ்டானம்

இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே அமைந்திருக்கிறது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. பாலியல் சக்தியைக் கொடுப்பதிலும் பெறுவதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை தாண்டி அறிகின்ற சக்தி இதிலிருந்து தான் கிடைக்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மணிபூரகம்

சோலார் ப்ளெக்ஸஸ் என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே இது இருக்கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. இரைப்பை,கல்லீரல்,பித்தப்பை,மண்ணீரல்,ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

அனாகதம்

இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருக்கிறது. அன்பு, பாசம்,இரக்கம்,சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.

தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

விசுத்தி

இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

ஆக்ஞா சக்கரம்

இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.

பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

சகஸ்ரஹாரம்

இதற்கு தாமரைச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தச்சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும்,நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.


நன்றி கதிர்
நன்றி; தமிழ்முரசு அவுஸ்திரேலியா.

Thursday, July 7, 2011

வாழ்வுச் சுட்டி


அதிகமான நேரங்களில் மகிழ்வான மனநிலையுடன் காணப்படுதல்,குழந்தைகளின் அன்பையும் சான்றோரின் மதிப்பையும் பெற்றுக் கொள்ளல்,நேர்மையான விமர்சகர்களால் பாராட்டப் படுதல்,ஆரோக்கியம் குறைந்த மனிதர்களின் கருத்துக்களையும் ஜீரணித்துக் கொள்ளல்,அழகை ரசித்தல்,மனிதர்களின் நல்ல பக்கங்களைப் பார்த்தல்,ஆரோக்கியமான பிள்ளைகள்,அழகிய பூஞ்சோலைகள்,மாற்றியமைக்கப் பட்ட சமூக அமைப்பு போன்றவை மூலம் உலகை இன்னும் சிறப்பாக விட்டுச் செல்லுதல்,நாம் வாழ்ந்ததால் எத்தனை மனிதர்கள் சந்தோஷமாக மூச்சு விட்டார்கள் என்று அறிதல் என்பவை வெற்றிகரமான வாழ்வின் சுட்டிகளாகும்.

’தமிழ் இலக்கிய செல்நெறி வளர்ச்சியில் விஞ்ஞான வளர்ச்சியின் பங்கு’என்ற கட்டுரையில் கோகிகா. மகேந்திரன்.

-எழுத்தாளர் விழா மலர்.சிட்னி. 2005.

Tuesday, May 31, 2011

பெற்றோர்களுக்கு,
பெற்றோர்களே!
உங்கள் குழந்தைகள்
உங்கள் குழந்தைகள் அல்லர்;
அவர்கள்
உங்களிடம் இருந்து வரவில்லை.
உங்கள் வழியாக வருகிறார்கள்.
..........

- கலீல் ஜிப்ரான்.

Friday, April 29, 2011

இனங்களைத் தாண்டியும்......

நன்றி; amuthu.com

(திரு. அ. முத்துலிங்கம் அவர்கள் பிரபலமான ஈழத்து எழுத்தாளர் தற்போது கனடாவில் வசிப்பவர். அவர் தன் இணையத் தளத்தில் எழுதி இருந்த நாட்குறிப்பு இது. அவருக்கு என் நன்றி.)ஆறாத் துயரம் (2011-03-28)

நான் பல சமயங்களில் பலர் ஆறாத் துயரம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்; எழுதியிருப்பதை படித்துமிருக்கிறேன். நான் நேரில் கண்ட சம்பவம் ஒன்று இரண்டு நாட்கள் முன்புதான் நடந்தது.

என் நண்பர் ஒருவர் உடல் நலமில்லாமல் இருந்தார். மூன்று மாதங்களாக பல மருத்துவர்களைப் பார்த்தும் நிறைய மருந்துகள் எடுத்தும் ஒரு பிரயோசனமில்லை. எக்ஸ்ரே, ஸ்கான், ரத்தப் பரிசோதனை என்று நிறையச் செய்து பார்த்துவிட்டார்கள் ஆனால் ஒருவருக்கும் நோய் என்னவென்று பிடிபடவில்லை. வருகின்ற திங்கட்கிழமை அவர் ஆஸ்பத்திரியில் அனுமதியாகிறார். மேலும் பல மருத்துவர்கள் புதிய பரிசோதனைகளை மேற்கொள்ளுவார்கள். வியாதி என்னவென்று கண்டுபிடித்து அதற்கு சிகிச்சை ஆரம்பிப்பதுதான் நோக்கம். சிலவேளைகளில் சத்திர சிகிச்சைகூட தேவைப்படும். அவர் ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் இருக்கலாம், இரண்டு மாதம் இருக்கலாம். வேறு என்ன என்னவோ எல்லாம் நடக்கலாம்.

அவர் போலந்துக்காரார், வயது எண்பதுக்கு மேலே. பல மாதங்களுக்கு பிறகு ஆளை நேரில் பார்த்த நான் திடுக்கிட்டேன். எடை சரி பாதியாகக் குறைந்துவிட்டதென அவரே சொன்னார். உடைகள் ஆணியில் கொழுவிவிட்டதுபோல உடம்பில் தொங்கின. நீளமான கழுத்து சட்டென்று நடுவிலே வளைந்துபோய் கிடந்தது. மிகக் களைப்பாகக் காணப்பட்டார். இரண்டு வாக்கியத்துக்கு ஒருமுறை வாயை திறந்து காற்றை விழுங்கிவிட்டு பேசினார்.
நண்பர் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் கனடாவுக்கு வந்தவர். 60 வருடங்களை கனடாவில் கழித்துவிட்டார். தன்னுடைய இளவயதுச் சம்பவங்களை தொட்டு பேசிக்கொண்டு வந்தவர் தன் தகப்பனார் புறா வளர்த்த கதையை சொன்னார். நிறைய புறாக்களை வளர்த்து விற்பதை ஒரு பொழுதுபோக்காக அவர் செய்தார். தூது ஓலை கொண்டுபோகும் புறாக்களுக்கு பயிற்சி கொடுப்பதில் வல்லவர். புறாக்களுக்கு தங்குவதற்கு நல்ல வசதியும் உணவும் இருப்பது அவசியம். அவை கூட்டிலே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்ளவேண்டும். கிரமமாக காலை வேளையில் உணவளித்தால் எங்கே கொண்டுபோய் விட்டாலும் அவை திரும்பிவிடும்.

ஓய்வு நாட்களில் என் நண்பரும் அவர் தகப்பனும் புறாக்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள். புறாவை எடுத்துக்கொண்டு ஒரு மைல் தூரம் சென்று அதை ஆகாயத்தில் எறிந்துவிடுவார்கள். இவர்கள் திரும்பமுன்னர் அது பறந்து கூட்டுக்கு வந்துவிடும். சிறிது சிறிதாக தூரத்தைக் கூட்டிக்கொண்டே போவார்கள். அவைகளுடைய உணவு நேரம் காலையில் என்பதால் அதிகாலையிலேயே புறப்பட்டு நெடுந்தூரம் சென்று புறாவை விடுதலை செய்வார்கள். உணவு நேரமானபடியால் புறா பறந்து எப்படியும் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடும். ஒன்றிரண்டு புறாக்கள் தொலைவதுமுண்டு. ஆனால் அநேகமாக எல்லா புறாக்களும் திரும்பிவிடும்.
’அப்பாவிடம் ஒரு அழகான புறா இருந்தது. வெள்ளை நிறம், வாலில் மாத்திரம் மண் தூவியது போல கொஞ்சம் மஞ்சள் படர்ந்திருக்கும். அதற்கு நான் அல்பிங்கா என்று பெயர் சூட்டினேன். போலிஷ் மொழியில் அல்பிங்கா என்றால் வெள்ளை என்று பொருள். நாங்கள் வளர்த்த புறாக்களில் அதைப்போல அழகான ஒரு புறாவையோ மூளைத்திறன் கொண்ட பறவையையோ நான் கண்டதில்லை. அந்தக் காலத்து அரசர்கள் கடிதங்களில் செய்திகள் அனுப்புவது இப்படியான புறாக்களில்தான். என்னுடைய காலத்தில்கூட ஒரு புகழ்பெற்ற டொக்ரர் அவசரமான மருந்துகளை புறாவின் காலில் கட்டி தருவித்திருக்கிறார். அப்பாவுக்கும் எனக்கும் இந்தப் புறாவில் தனி ஈடுபாடு இருந்தது. சிறிது சிறிதாக தூரத்தை கூட்டி 50 மைல் தூரம் பறப்பதற்கு அல்பிங்கா பழகிவிட்டது. எந்த திசையில் கொண்டு சென்று விட்டாலும் அது வீட்டுக்கு வந்துவிடும்.

அப்பாவுக்கு அடுத்த ஊரில் ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் ப்ரனிஸ்லோ. எப்பொழுது அப்பாவைச் சந்திக்க வந்தாலும் அப்பாவிடம் அல்பிங்காவை பற்றி பேசுவார்; அதை தனக்கு விற்கச் சொல்லி அப்பாவை வற்புறுத்துவார். அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர் தயாராக இருந்தார். நான் அந்தப் புறாவில் எவ்வளவு அன்பு வைத்திருந்தேன் என்பதை அப்பா அறிவார். பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் என்னுடைய முதல் வேலை அல்பிங்காவை எடுத்து கையிலே வைத்து கொஞ்சுவதுதான். ஆகவே அப்பா நண்பரின் வேண்டுகோளைத் தட்டிக்கொண்டே வந்தார்.

1939ம் ஆண்டு செப்டம்பரில் ஜேர்மனி போலந்தின்மேல் படையெடுத்தது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது அப்படித்தான். போலந்து ஒரு மாதத்தில் முற்றாக வீழ்ந்தது. நாங்கள் இ.ப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஒரு வருடத்திற்குள் நிலைமை மிக மோசமானது. எங்கள் குடும்பம் பெரியது. அப்பாவினால் செலவுகளை சமாளிக்க முடியவில்லை. நான் பள்ளிக்கூடத்தில் இருந்தபோது ஒரு நாள் அப்பா ப்ரனிஸ்லோவுக்கு புறாவை நல்ல விலைக்கு விற்றுவிட்டார். அதில் வந்த பணம் எங்கள் வீட்டுக்கு இரண்டு மாதத்திற்கு சாப்பாடு போட்டது என்று அப்பா பின்னாளில் சொன்னார். பள்ளியிலிருந்து வந்த நான் அப்பா புறாவை விற்றதைக் கேள்விப்பட்டு அப்படியே மனமுடைந்து போனேன். ஒரு முழு நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன். ஒரு துண்டு ரொட்டிக்கு சிரமப்பட்ட அந்தக் காலத்தில் பட்டினி கிடப்பதில் எந்தவித பொருளும் இல்லை.

ப்ரனிஸ்லோவுக்கு புறாவை விற்றபோது அப்பா ஒரு விசயத்தை அவருக்கு தெளிவாகச் சொல்லியிருந்தார். இந்தப் புறா பயிற்சி கொடுக்கப்பட்டது. அதி புத்திசாலி. இது திரும்பவும் எங்கள் வீட்டுக்கு வந்தால் அதை நான் இன்னொருமுறை உங்களுக்கு தரமாட்டேன். அவரும் சம்மதித்தே அதை வாங்கிப்போனார்.

இரண்டு வாரம் ஓடிவிட்டது. ஒருநாள் காலை நான் பாடசாலைக்கு புறப்பட்டேன். வீட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்ததும் அப்படியே திடுக்கிட்டு நின்றேன். நான் வளர்த்த அல்பிங்கா திரும்பி வந்துவிட்டது. வாசலிலே நடுங்கிக்கொண்டு நின்றது. கழுத்தை சரித்து நிமிர்ந்து பார்த்தபோது விழுந்துவிட்டது. இரண்டு கைகளிலும் அதை தூக்கியபோது இருதயம் துடிப்பதுபோல துடித்தது. அதனுடைய இரண்டு இறக்கைகளும் வெட்டப்பட்டிருந்தன. அப்படியும் 17 மைல் தூரத்தை அது இரண்டு வார காலமாக நடந்தே கடந்திருந்தது. புறா கிளையில் உட்காரும் பறவை என்பதால் அதற்கு காலின் முன்பகுதியில் மூன்று விரல்களும் பின்பகுதியில் ஒரு விரலும் இருக்கும். கிளையில் பிடித்து உட்கார வசதியாக. அல்பிங்கா நடந்து வந்ததில் பின் விரல் முற்றாக தேய்ந்துவிட்டது. முன்விரல்கள் பாதியாக மழுங்கிப்போய் ரத்தம் கசியக் கிடந்தன. நிற்க வைத்தபோது அல்பிங்கா நிற்கமுடியாமல் சரிந்து சரிந்து விழுந்தது. அன்றிரவே இறந்துவிட்டது.’

இந்தக் கதையை சொன்னபோது நண்பர் விம்மி விம்மி அழத் தொடங்கினார். அவர் தன்னுடைய அப்பாவை நினைத்தாரோ, அந்தப் புறாவை நினைத்தாரோ அல்லது தன்னை நினைத்தாரோ தெரியாது. அடக்க அடக்க அவரை மீறி ஏதோ ஒன்று நடந்தது. மெலிந்துபோன அவர் உடம்பு துடிக்க எக்கி எக்கி அழுதார். 80 வயதுக் கண்களில் இருந்து நீர் கொட்டியது. நான் என் ஆயுளிலே இவ்வளவு வயதான ஒருவர் அழுததை பார்த்தது இதுவே முதல் தடவை. 60 வருடங்களுக்கு முன் இறந்துபோன ஒரு புறா. அதை நினைத்து அழுதார். ஆறாத் துயரம் என்பது இதுதான் என்று நினைக்கிறேன்.

END

Monday, April 18, 2011

பார்வைகள்


ஆற்றில் விழுந்த அழகி


அழகி ஒருத்தி ஆற்றில் அடித்துச் செல்லப்படும் போது
''நமக்கென்ன''என்று பாராமல் இருப்பவன் மனித மிருகம்.
''ஆபத்து,ஆபத்து!''என்று அலறுபவன் பொது ஜனம்.
''ஐயோ பாவம்''என்று முணுமுணுப்பவன் அனுதாபி
''ஆண்டவனே, அவளைக் காப்பாற்று'' என்பவன் பக்தன்.
''அற்புதமான அழகு''என்று அந்த நிலையிலும் ரசிப்பவன் கவிஞன்.
''பெண்களும் நீச்சல் கற்க வேண்டும்''என்பவன் சீர்திருத்தவாதி.
''ஆற்றில் குளிக்கக்கூடப் பாதுகாப்பில்லை''என்பவன் எதிக்கட்சிக்காரன்.
''எவ்வளவு இழப்பீடு வழங்கலாம்''என யோசிப்பவன் ஆளும் கட்சிக்காரன்.
காப்பாற்றும் முயற்சியில் உயிர் துறப்பவன் தியாகி.
ஆற்றில் இறங்கி,காப்பாற்றி,தன வழியே செல்பவன் கர்மயோகி.

நன்றி; தென்றல்

Sunday, March 13, 2011

Moral Values

ஞாநி அவர்களிடம் இருந்து,
எங்கள் சிந்தனைக்காக!


(www.sinnakuddy1.blogspot.com என்ற வலைப்பூவில் இருந்து இந்த நிகழ்ச்சி எடுத்து வரப்பட்டது.நன்றி; சின்னக்குட்டி)

Monday, February 21, 2011

மனதின் படிக்கட்டுக்கள்’மனித தேவைகளே அவனின் நடத்தையைத் தீர்மானிக்கின்றன’ என்கிறார் maslow என்ற மேலைத் தேய உளவியலாளர்.முதலில் வருவன அவனின் அடிப்படைத் தேவைகள். அது பூர்த்தியாகும் பட்சத்தில் அவனது தேவைகள் அடுத்த கட்டமான பாதுகாப்பு, நின்மதி போன்றவற்றை நாடுகின்றது.அதற்கடுத்ததாக அன்பு,உறவு,குடும்பம்,நட்பு போன்றவற்றை மனம் இயல்பாக நாடுகின்றது.

இவ்வாறே ஒவ்வொன்றும் பூர்த்தியாகுமிடத்து அடுத்த கட்டத்தை நோக்கி மனம் நகர்கிறது.இறுதியில் அது உயர்வான மனநிறைவில் வாழ்வைப் பூரணப் படுத்துகிறது.அது நிறைவேறும் வரை மனம் ஓடிக் கொண்டே இருக்கும்.போராட்டமும் தொடர்ந்த வண்ணமாகவே இருக்கும் என்கிறது உளவியல்.

ஒரு மனிதன் எந்தப் படிநிலையில் இருக்கிறானோ அந்தத் தேவைகளை மையமாக வைத்து அவனது வேட்கைகள்,
விருப்புவெறுப்புகள்,தொடர்புகள்,நடைமுறைகள்,சிந்தனைகள்,கருத்துலகம்,பார்வை,நோக்கம்,திருப்தி முதலியன அமைகின்றன.

நீங்கள் எந்தக் கட்டத்தில் இப்போது நிற்கிறீர்கள்?\-------------------------------7.உயர் திறன்,மனநிறைவு,
\-----------------------------6.ரசனை,கலையாக்கம்,அழகுணர்ச்சி
\--------------------------5.அறிவாற்றல்,தெளிதல்,ஞானம்
\------------------------4.மானம்,கெளரவம்,மதிப்பு
\----------------------3.அன்பு,உறவு,
\------------------- 2.பாதுகாப்பு,நின்மதி
\-----------------1.உடலியற் தேவைகள்,உணவு,உடை,வீடு,மேலே உள்ளவை நம்முடைய படிநிலைத் தேவைகள்.நம்மைச் சுற்றி உள்ள விரிவடையும் வட்டங்கள் கீழே உள்ளவை.


1.அகங்காரம்.
|
2.குடும்பம்.
|
3.கூட்டுக் குடும்பம்.
|
4.சாதி,குலம்.
|
5.பிரதேசம்.
|
6.இனம்,கலாசாரம்.
|
7.தேசம்.
|
8.மதம்.
|
9.மானுடம்.
|
10.பரமாத்மா.


நன்றி;பேராசிரியர். தயா.சோமசுந்தரம்.’தன்னாத்மாவைத் தேடி அலையும் மனிதன்’,தலைவர்,உளமருத்துவத்துறை,யாழ்.பல்கலைக்கழகம்.1994.

Monday, February 7, 2011

நோபல் பரிசின் பின்னே...


மார்கழி மாதம் பத்தாம் திகதி நோபல் சமாதானப் பரிசு வழங்கப் படும் போது எல்லோருக்கும் அதன் ஸ்தாபகர் அல்பேட் நோபலின் பெயர் தான் ஞாபகம் வரும்.ஆனால் அவருக்குப் பின்னே ஒரு பெண்மணி இருந்தாள்.

பெர்த்தா. ஸ்டெட்னர் என்ற அந்தப் பெண் வெடி மருந்துத் தயாரிப்பாளரான நோபலின் கீழே வேலை பார்த்தாள்.பின்னர் ரஷ்யாவில் தன் கணவருடன் தங்கியிருந்த போது துருக்கிக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்த போரின் கொடுமையைக் கண்ணால் கண்டார்.சமாதான இயக்கங்களில் ஈடு பட்டு நோபலையும் ஈடுபாடு கொள்ளச் செய்தார்.பெரும் ஆராய்ச்சிகள் செய்து ‘லே டவுன் யுவர் ஆர்ம்ஸ்’(உங்கள் ஆயுதங்களைக் கீழே போடுங்கள்)என்ற நாவலை எழுதினார்.போரின் கொடுமைகளை விபரித்த அந்த நாவல் நோபலை மிகவும் கவர்ந்தது.

இருபது ஆண்டுக் காலம் பெர்த்தாவோடு சகோதர நண்பரைப் போலp பழகிய நோபல் தான் இறக்கின்ற போது சமாதானத்துக்கான நோபல் பரிசை ஏற்படுத்தினார்.

(நன்றி; அறிவுக்கு ஆயிரம் வாசல்,ரா.கி.ரங்கராஜன்).

Friday, January 14, 2011

தத்துவத்தின் தார்ப்பரியமும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும்


தமிழன் வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்தது மாத்திரமல்ல பிரபஞ்சத்தின் ரகசியம் பற்றிய தேடலுக்கும் தன் வாழ் நாளில் இடம் ஒதுக்கி இருந்திருக்கிறான்.உலகம் பஞ்சபூதங்களால் ஆனது என்பதைக் கண்டறிந்தது மாத்திரமல்லாது;உடலும் அவ்வண்ணமே பஞ்சபூதங்களால் ஆனது என்பதை கண்டறிந்து சொன்னதன் காலம் தொல்காப்பியரின் காலமாகும்.

தொல்காப்பியர் அதனை “நிலம்,தீ,நீர்,வளி,விசும்போடைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” (86) என்று குறிப்பிடுகிறார்.புறநானூற்றின் 87வது பாடல் “அனுச்செறிந்த நிலனும் அந் நிலத்தின் ஓங்கிய ஆகாயமும் அவ் ஆகாயத்தைத் தடவி வரும் காற்றும்,அக் காற்றின் கண் தலைப்பட்ட தீயும்,அத் தீயோடு மாறு பட்ட நீருமென ஐவகைப் பெரிய பூதத்தினது தன்மை போல”என்று குறிப்பிடும்.

இவ் ஐம் பெரும் பூதங்களை அடிப்படையாகக் கொண்டு ஐம் புலன்களும் அவற்றை நுகரும் பொறிகளும் உண்டாகின்றன என்று பரிபாடல் குறிப்பிடுகின்றது.

“சுவைமை யிசைமை தோற்ற நாற்ற மூ
றவையு நீயே யடு போ ரண்ணால்
அவையவை கொள்ளுங் கருவியு நீயே
முத்தியாங் கூறிய வைந்தனுள்ளும்
ஒன்றனிற் போற்றிய விசும்பும் நீயே
இரண்டி ணுணருந் வளியு நீயே
மூன்றி னுணருந் தீயு நீயே
நான்கி னுணரு நீரு நீயே
ஐந்துடன் முற்றிய நிலனு நீயே”.

இதே விழிப்புணர்வு சங்கமருவிய காலத்திலும் நிலைத்து நின்றிருக்கின்றது என்பதற்குத் திருக்குறளில் வரும் “சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் .... “(குறள் 106) என்பதும்;கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்....” (குறள் 90)என்ற குறள் அடையாளம் கூறி நிற்கிறது.

இப் பூமியில் இருக்கும் பஞ்சபூதத்தின் அனைத்து வடிவங்களாலும் உருவானதே மனித உடலும் என்பதை சட்டமுனி ஞானம் சிறப்பாக விதந்துரைக்கும். அது நம் உடலானது பஞ்சபூத மயமானது என்பதையும் அண்டத்தில் இருக்கும் ஆற்றலுக்கும் நாம் கொண்டிருக்கும் உடலுக்கும் தொடர்பு இருப்பதால் அண்டம் வேறு பிண்டம் வேறு என்னும் பாகுபாடு இயற்கை நியதியில் இல்லை என்பதை கீழ்வருமாறு உரைக்கிறது.

“அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்து தான் பார்க்கும் போதே”

என்கிறது.நம்முடைய கால்கள் பூமியை எப்போதும் தொட்ட வண்னமாக உளளன. மூச்சுக் காற்றைக் கணம் தவறாது சுவாசித்தவாறே இருக்கிறோம்.மூச்சினை நாம் நிறுத்துகின்ற போது உடல் வெறும் சடலமாகி விடுகிறது. அப்படி இருக்கும் போது இந்த இயற்கையில் இருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று எவ்வாறு சொல்லிக் கொள்ள முடியும்? அவ் இயற்கை எம்மைத் தன்னோடு தொடர்பறா வண்ணம் பிணைத்து வைத்திருக்கிறது.

அந்த இயற்கையையே நாம் கடவுள் என்கிறோம்; விதி என்கிறோம்.பிறக்கின்ற போது நாம் விட்ட முதல் மூச்சில் எழுதப் பட்டு விட்டது நம் வாழ்வு.பிணைக்கப் பட்டு விட்டது நம் சரீரம்.சோதிடம் கூட அதிலிருந்து கணிக்கப் படுவது காண்க.

இந்தப் பின்னணியை நன்கு அறிந்து கொண்டு அது பற்றி ஆராய்ந்தவர்களாக சித்தர்களும் சான்றோர்களும் விளங்கி இருக்கிறார்கள். அது பற்றிய சிந்தனைகளுக்கு தம் வாழ்நாளை ஒதுக்கி இருக்கிறார்கள்.அதிலிருந்து தான் அவர்கள் ஆண்ம தத்துவத்தைக் கண்டறிந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.அவர்கள் தாம் வேறாகவும் தம் உடல் வேறாகவும் கண்டு தெளிந்திருக்கிறார்கள்.அதனை அவர்கள் தெளிவாகக் கண்டு கொண்டதனால் தாம் வெளியில் நின்றவாறே தம் உடலை அது புரியும் செயலை வேடிக்கை பார்க்கும் வல்லபம் கை வந்திருக்கிறது.

அதுவே வளர்ந்து பின்னாளில் தியானமாக உருவெடுத்திருக்கிறது.

அவர்கள் உடம்பை எவ்வாறெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்று சின்னதாகச் செய்த சோதனையில் சுவாரிசமான விடைகள் பல வந்து சேர்ந்தன.‘ஊன் பொதி’ என்றும்(120) சஞ்சாரப் பிரேதம்’(60)என்றும் விவேக சிந்தாமணி உடலை வர்ணிக்கிறது.’ஊன் தடி’ என்று புறநானூறு (74) கூறுகிறது.’என்பு தோல் போர்த்த உடம்பு’ என்கிறது குறள்,’காற்றடைத்த பை’ என்பர் சித்தர்.’ஊன் நிறைந்த காயம்’ என்றும்; ’மலசலங்கள் பாயும் புழுக் கூடு’ என்றும் பத்திரகிரியார் என்ற சித்தர் கூறுகிறார்.’ஊத்தைச் சடலம்’ என்றும்;’ஐந்து பேர் சூழ்ந்திடும் காடு’ என்றும் கடுவெளிச் சித்தர் பார்க்கிறார்.’ஆபாசக் கொட்டில்’ என்பார் பட்டினத்தார்.எம்மோடு வாழ்ந்த கண்ணதாசன் அதனை இன்னும் பலவாறாக வர்ணிப்பார். இமயமலைக் காடுகளில் தேடினால் இன்னும் பல அற்புதங்கள் கிட்டும்.ஞானியர் பலர் ஞான நிஷ்டையில் அங்கிருக்கிறார்கள்.ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்மீகத் தேடல் நமக்குள்ளும் ஆரம்பமாகிறது.

இப்படிப் பலரும் பலவாறு உடலைப் பாக்கின்ற போதும்;உடலை நாம் தற்காலிகமான ஒன்றாக ஆத்மாவைத் தாங்கி நிற்கும் ஒரு கவசமாக நாம் பார்ப்பதில்லை.ஆண்மா ஒன்றே நிலையானது என்பதையும் பிணி, மூப்பு, சாக்காடு என்பவற்றால் அழியக் கூடியது இந்த உடல் என்றும்;உயிர் என்ற ஒன்றே பல்வேறு தோற்ற வேறுபாடுகளைக் கொண்ட உடல் என்ற சட்டையைப் போட்டிருக்கிறது என்பதையும் நாம் கண்டு கொண்டு விட்டால் ஆன்மாவுக்கு உணவளிக்கின்ற பிரதான விடயங்களில் நாம் ஈடுபடக் கூடும்.

அந்த நிலையை நாம் எட்டி விட்டால் உலகில் உள்ள சகல ஜீவராசிகளையும் ஒன்றாக நாம் கருத வரும்.எல்லோரிடமும் எல்லாவற்றிலும் நேசம் பிறக்கும்.சாத்வீகமும் சமாதானமும் நம்மில் நிலவும்.புலன்கள், தற்காலிகங்களைத் தள்ளி வைத்துப் பார்க்கப் பழகும்.உலக நாடகத்தைத் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்போம்.இயற்கையின் பாசையை மொழி பெயர்ப்பது கூட சாத்தியப் படும்.பிரபஞ்சத்தின் ரகசியம் புரியும்.அன்பு மயமான சேவையில் மனம் நிறைவு கொள்ளும்.பற்றுக்களோடு பற்றற்ற வாழ்வு சாத்தியப் படக் கூடும்.நிரந்தர செல்வம் எதுவென்று நாம் கண்டுணர்ந்து வாழ்தலும் வசப்படக் கூடும்.

ஒரு முறை வேர்களைத் தேடி என்ற வலைப்பூவில் ஒரு சிறு சம்பவம் ஒன்று சொல்லப் பட்டிருந்தது. அதனை அப்படியே இங்கே தருகிறேன்.

“இளந்துறவி தன் குருவிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.

‘குருவே நான் புகை வண்டியில் இடம் கிடைக்காது பாதையில் அமர்ந்து வந்தேன்.அப்போது என்னைக் கடந்து சென்றவர் என்னை மிதித்து விட்டார்.கோபம் கொண்ட நான் அவரைத் திட்டி விட்டேன்.கோபத்தை அடக்க முயன்றும் என்னால் இயலவில்லை ஏன்? என்றார்.

குரு கூறினார்;


நீ வேறு; உன் உடல் வேறு என்ற எண்ணம் எப்போது உனக்குத் தோன்றுகிறதோ அப்போது உன்னால் முதிர்ந்த நிலை அடைய முடியும் என்றார்”.


உண்மை தானே!

எல்லோருக்கும் என் மனமார்ந்த தைத் திருநாள் வாழ்த்துக்கள்!

(குறிப்பு;-வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட விதம் இது.உங்களுக்கு இதில் மாறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் இருந்தால் தயங்காமல் எனக்கு அறியத் தாருங்கள்.அது நான் வளர உதவும்)

(தமிழ்முரசு அவுஸ்திரேலியாவுக்காக எழுதியது.பிரசுரம் 17.01.11)

Sunday, January 2, 2011

ஜைனம் சொல்கிறது
அறிவெனப் படுவது துன்பம் துடைத்தல்!
செறிவெனப்படுவது மும்மையும் செறிதல்!
ஆண்மை எனப் படுவது ஐம்புலன் வெல்லல்!
கேண்மை எனப் படுவது கெட்ட இடத்து உதவல்!
அருமை எனப்படுவது அறநெறி வழுவாமை!
பெருமை எனப்படுவது பிறன் இல் விளையாமை!
அறம் எனப் படுவது ஆருயிர் ஓம்பல்!
உறவெனப் படுவது உற்றுழி நிற்றல்!
வாய்மை எனப் படுவது வருந்தாது உரைத்தல்!
தூய்மை எனப் படுவது உள்ளத் தூய்மை!

-சீவ சம்போதனை என்ற ஜைன சமய நூலில் சிரோணிக மகாராசன் கூறும் அறிவுரை இது.-

ஆதாரம்; மு.அருணாசலம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு - பதினாறாம் நூற்றாண்டு’

நன்றி; அறிவுக்கு ஆயிரம் வாசல்; ரா.கி.ரங்கராஜன்.