Saturday, April 21, 2012

Monday, April 2, 2012

தன்னை அறியும் விஞ்ஞானம் - அறிமுகம்


ஸ்ரீல பிரபுபாதா என்பவர் யார்? என்று பலர் கேட்கிறார்கள்.இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது கடினம். ஏனெனில் ஸ்ரீல பிரபுபாதா  சம்பிரதாயமான விளக்கங்களுக்கு அப்பாற்பட்டவர். வெவ்வேறு சமயங்களில் மக்கள் அவரை அறிஞர், தத்துவஞானி, கலாசாரத் தூதர், நூலாசிரியர், மதத் தலைவர், ஆன்ம குரு, சமுதாய விமர்சகர், தெய்வீக மனிதர் என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள். உண்மையில் அவர் இவை எல்லாமாகவும் அதற்கு மேலாகவும் விளங்கினார். கீழ் நாட்டு ஆன்மீகத்தின் மெலிந்த வடிவங்களை சமர்த்தியமாகத் தயாரித்து மேல் நாடுகளுக்குக் கொண்டு வந்து, நமது உடனடி நல்வாழ்வு விருப்பத்தை பூர்த்தி செய்வதாகக் கூறி, நம் ஆன்மீக அறிவீனத்தைப் பயன் படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு இங்கு வரும் போலிக் குருமார்களோடு ஸ்ரீல பிரபுபாதாவை யாரும் நிச்சயமாகக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். அவர் உண்மையிலேயே ஒரு தெய்வீக மனிதர். சாது. ஆழ்ந்த அறிவும் ஆன்மீக உணர்வும் பெற்றவர். ஆன்மீகத்தை விட்டு விட்டு வெகு தூரம் விலகி நிற்கும் நம் சமுதாயத்திடம் ஆழ்ந்த கவலையும் அனுதாபமும் கொண்டவர்.

மனித சமுதாயம் அறிவொளி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் இந்தியாவின் மாபெரும் புராதன ஆன்மீக இலக்கியங்களை மொழிபெயர்ப்புகளாகவும், சுருக்க விளக்கங்களாகவும் சுமார் எண்பது புத்தகங்களாகத் தயாரித்து வெளியிட்டார். அவரது நூல்கள் ஆங்கிலத்திலும் பிற மொழிகள் பலவற்றிலும் அச்சாகியுள்ளன. மேலும் 1944ல் ஸ்ரீலபிரபுபாதா அவர்கள் தன்னந்தனியாக “மீண்டும் கடவுளிடம்”( Back to God head) என்ற ஆங்கிலப் பத்திரிகையைத் துவங்கினார்கள். அது இன்று மாதந்தோறும் ஆங்கிலத்தில் மட்டும் ஐந்து இலட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகிறன. “The Science of Self Realization” ( தன்னை அறியும் விஞ்ஞானம்) என்ற இந்த நூலில் காணப்படும் பேட்டிகள், உரைகள், கட்டுரைகள், கடிதங்கள் ஆகியவை பெரும்பாலும்  “Back to God head”  என்ற அந்தப் பத்திரிகையில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளவை.

இந்நூலில், ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னர் மாபெரும் முனிவரான வியாசதேவரும், இந்தியாவின் புராதன இலக்கியங்களும் வழங்கியுள்ள அதே செய்தியை ஸ்ரீல பிரபுபாதா மீண்டும் எடுத்துத் தருகிறார். பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம்,மற்றும் பல புராதன வேத நூல்களில் இருந்து அவர் தாராளமாக, அடிக்கடி மேற்கோள் எடுத்தாள்வதை நாம் இந்நூலில் காணலாம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக மாபெரும் ஆத்ம ஞானிகளான மற்ற ஆசாரியர்கள் வழங்கி வந்துள்ள, காலங்களுக்கு அப்பாற்பட்ட, அதே அறிவை நம்முள்ளும், இயற்கையிலும், பிரபஞ்சத்திலும் நிலவும் ஆன்மாவையும் நமக்குள்ளும் வெளியிலும் வியாபித்திருக்கும் உயராத்மாவைப் பற்றிய ரகசியங்களை, ஸ்ரீல பிரபுபாதா இன்றய ஆங்கில மொழியில் வெளிப்படுத்துகிறார். வியக்கத்தக்க தெளிவுடன் அவர் பேசுகிறார். அவரது எளிய பேச்சு வன்மை நமக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளது. தன்னையறியும் விஞ்ஞானம் நம் நவநாகரிக உலகிற்கும், நம் எல்லாரின் வாழ்க்கைக்கும் எவ்வளவு இன்றியமையாதது என்பதை அவர் பேச்சு நிரூபிக்கின்றது.

இந்தச் சிறப்பு நூலுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள முப்பத்தாறு கருத்தோவியங்களில், ஸ்ரீல பிரபுபாதா அமெரிக்கா வந்தடைந்ததும் எழுதிய மனம் நெகிழ் கவிதையும் “ஆன்ம ஆராய்ச்சி” பற்றிப் பெயர் பெற்ற இதயச் சிகிச்சை நிபுனர் ஒருவருடன் அவர் நிகழ்த்திய உரையாடலும், மறுபிறவி பற்றி லண்டன் வானொலி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் வெளியிட்ட தகவல்களும், உண்மையான மற்றும் போலியான குருமார்களைப் பற்றி லண்டனில் ‘டைம்ஸ்’ பத்திரிகையில் அவர் தெரிவித்த ஆணித்தரமான கருத்துக்களும், கிருஷ்னர் மற்றும் கிறீஸ்து பற்றிய ஜேர்மானிய பெனிடிக்டைன் மத குருவிடம் அவர் மேற்கொண்ட உரையாடலும், உன்னத உணர்வு மற்றும் கர்மவிதிகள் பற்றிய அவரின் கண்ணோட்டமும் ஆன்மீகப் பொதுவுடமை பற்றி ரஷ்யப் பேரறிஞர் ஒருவருடன் அவர் நிகழ்த்திய பேச்சுவார்த்தையும், நவீன விஞ்ஞானத்தின் வெறுமையைப் பற்றி அவர் தம் சீடர்களுடன் மனம் திறந்து பேசிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

இக்கருத்தோவியங்களை நீங்கள் வரிசைக்கிரமமாகப் படித்தாலும், அல்லது உங்கள் கவனத்தை முதலில் கவரும் விஷயத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தாலும், சரி “ தன்னை அறியும் விஞ்ஜானம்” (The Science of Self Realization ) உங்களைத் தட்டி எழுப்பி உங்களில் புத்துணர்வையும் புத்தொளியையும் ஏற்படுத்துவது திண்ணம்.

-           -பதிப்பாளர்கள்