Friday, April 26, 2013

அநுபவ பாடம்

விரும்பியதைச் செய்வது சுதந்திரம்
செய்வதை விரும்புவது சந்தோஷம்
‘வாழ்தல்’ என்பது அது தான்.

நூறுசதவீத ஈடுபாட்டுடன் செய்யும் எந்தக் காரியமும் வீணாவதில்லை.
....................................................

மின்சார பல்ப்பைக் கண்டு பிடித்த எடிசனில் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி இது.



எடிசனின் ஆய்வு முடிவில் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விஞ்ஞானிகள் அறிஞர் குழாம் வந்து விட்டது. மேல் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு காட்டுவதற்காக தான் செய்து வைத்திருந்த மின்சார பல்ப்பை எடுத்து வருமாறு தன் உதவியாளரிடம் கேட்டுக் கொண்டார் எடிசன்.

உதவியாளர் அதனைக் கொண்டு வரும் போது தவறுதலாக அது விழுந்து உடைந்து போனது.எனினும்,பல தோல்விகளுக்கும் சோதனகளுக்கும் பழக்கப்பட்டு பண்பட்டிருந்த எடிசனின் செஞ்சம் அதற்காகத் தளரவில்லை. அவர் உடனடியாகவே மீண்டும் ஒரு பல்ப்பைச் செய்து அதே உதவியாளரையே எடுத்து வரச் செய்தார்.

ஏன் என்று கேட்டதற்கு எடிசனின் பதில் இது தான். “பல்ப் உடைந்தது; என்னால் அதனை மீண்டும் செய்ய முடிந்தது.ஆனால் அவனது மனம் காயப்பட்டு விட்டது. குற்ற உணர்வில் குறுகிப் போய் விட்டது. அவனை அதிலிருந்து விடுபட வைக்க இது தான் சிறந்த வழி. அவனால் இப்போது சிறப்பான அவதானத்தோடு அந்தச் செயலைச் செய்ய இயலும். எனக்கு அதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது”

Wednesday, April 3, 2013

நமக்கான கேள்விகள்

1. என் தேவை என்ன என்பதை எப்படித் தீர்மானிக்கிறேன்? மற்றவர்களிடம் இருப்பதை வைத்தா? எனக்குத் தேவை என்ற அடிப்படையிலா?

2.என் அன்றாடத் தேவைகளுக்கு நான் யார் யாரைச் சார்ந்திருக்கிறேன்?

3 தினமும் என்னைச் சார்ந்து  (என் பணியை) நேரடியாகவும் மறைமுகமாகவும்   யார் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியுமா?

4.ஊதியம் பெறாமல் அன்பினால் என் தேவைகளை அளித்து வருபவர்கள் யார் யார்?

5.ஊதியம் பெறாமல் அன்பின் காரணமாக நான் யார் யாருக்கு உதவியாக இருக்கிறேன்?

- கேள்விகள் நமக்கானவை. விடைகளும் நமக்குரியவை -

நன்றி: ஞாநி.ஆ.வி.12.9.07.

Saturday, March 2, 2013

அப்படியும் இப்படியும்



சரியான முடிவு என்பது அனுபவத்தால் பிறக்கிறது!
அனுபவம் என்பது தவறான முடிவுகளில் பிறக்கிறது.

நீ எடுத்த முடிவு சரியானதா என்று யோசிப்பதை விட
எடுத்த முடிவை சரியானதாக்க முயற்சி செய்.

முடியாது என்று நீங்கள் சொல்வதை எல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டே இருக்கிறான்.

நன்றி: பரிசு: மானவர் இதழ்: (தினக்குரல்) 24.2.13

Friday, January 11, 2013

விவேகம் என்பது......



ஒரு சாதகனுக்குத் தேவையான அடிப்படைக் குணாதிசயம் எது தேவையானது? எது தேவையற்றது? என்பதை அறிந்து கொள்வது தான்.

- மகாவீரர் -

Thursday, December 6, 2012

தீர்ப்புகள்



       
ஒருவரை விசாரித்து விட்டு இருவருக்குத் தீர்ப்புச் சொல்லாதே!

Sunday, November 18, 2012

சொற்கள்




கடுமையான, கசப்பான சொற்கள் என்பது பலவீனத்தின் அறிகுறி.

சொல்லில் இங்கிதம் என்பது திறமையாகப் பேசுவதை விடச் சிறந்தது.

நீ அமைதியாக வாழ விரும்பினால் கேள், பார், ஆனால் மெளனமாய் இரு!


நன்றி: தென்றல்

Saturday, September 22, 2012

கணக்கு வழக்கு



புத்தரைப் பார்க்க வந்த ஒருவன் திடீரென அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டான். புத்தரும் முகத்தைத் துடைத்தவாறு,''அப்பனே,வேறு என்ன சொல்ல விரும்புகிறாய்?''என அமைதியாகக் கேட்டார்.அவனுடைய அவமாரியாதைக்கு  எதிர் செயல் ஏதும் இல்லாது அவர் முகம் அமைதியாக இருப்பதைக் கண்ட அவனுக்கு மிகுந்த குழப்பம் ஏற்பட்டது.அவன் ஒன்றும் சொல்லாமல் திரும்பி விட்டான்.அன்றிரவு முழுவதும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை.

அவன் கொடுத்த அவமரியாதை அவனுக்கே திரும்ப வந்து விட்டதாய்  அவன் உணர்ந்தான்.நடந்ததை  அவனால் நம்ப முடியவில்லை.நீண்ட யோசனைக்குப் பின் தன்  தவறை அவன் உணர்ந்தான்.மறு நாள் அவன் நேரே புத்தரிடம் சென்று மன்னிப்பு கேட்டான்.

புத்தர் சொன்னார்,''அதைப் பற்றி கவலைப் படாதே.இதற்கு முன் எப்போதோ உனக்கு ஏதோ தீங்கு நான் இழைத்திருக்க வேண்டும்.இப்போது அந்தக் கணக்கு சரி செய்யப்பட்டு விட்டது.அதனால் நீ செய்ததற்குப் பதிலாக  நான் ஏதும் செய்யப் போவதில்லை. நான் ஏதேனும் பதிலுக்கு செய்தால் நம் கணக்கு முடியாது தொடர்ந்து கொண்டே போகும்.

நான் கணக்கை முடித்து விட்டேன்.”

நன்றி:தென்றல்.