ஒன்றே எனின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே எனின் அன்றேயாம், ஆமே எனின் ஆமேயாம்
இன்றே எனின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!
( கம்ப இராமாயணம்; யுத்த காண்டம்; கடவுள் வாழ்த்துப் பாடல்.)
இறைவன் ஒன்று என்றால் ஒன்றுதான்; பல என்றால் பலவேதான்; அப்படி அல்ல என்றாலும் அல்லதான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை என்றால் இல்லைதான்; உண்டு என்றால் உண்டுதான்; எல்லாம் நமது நம்பிக்கையில்தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நலமுடயதாக ஆகி விடும்!
(தெய்வம் என்றால் அது தெய்வம் சிலை என்றால் வெறும் சிலைதான்; உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை என்றார் பின்னால் வந்த கண்ணதாசன்.)
கம்பனுக்கும் முன்பே நம்மாழ்வார் இப்படிக்கூறி இருக்கிறார்.
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே
நம்பிக்கையே மனித வாழ்வு!
Think positive!
2 comments:
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்தில்லைதானே!
இது திருமூலரின் திருமந்திரம். நம்மாழ்வார், கம்பர் இவர்களுடைய காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் திருமூலரின் காலம் ஆறாம் நூற்றாண்டு என்றும் இணையத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதாரபூர்வமான தகவல்களா என்று தெரியவில்லை. அப்படி தகவல்கள் உண்மையாயின் முதலில் இக்கருத்தை சொன்னது திருமந்திரமாகும்.
காலங்காலமாய் ஆன்மீகப் பெரியோர் சொல்லிவந்த கருத்துகளில் இருக்கும் அடிப்படை உண்மையை அறிந்தாலே போதும். மனம் தெளிவாகும். எவருக்கு எதில் நம்பிக்கை இருந்தாலும் அடுத்தவர் நம்பிக்கையை மதித்து நடப்பதே மனிதத்தன்மையாகும். நம்பிக்கையே மனித வாழ்வு - உண்மைதான்.. அது நமதானாலும் மற்றவருடையதானாலும்! தடுமாறும் மனங்களுக்குத் தேவையான பகிர்வு. நன்றி மணிமேகலா.
வாவ்! ஆச்சரியமான தகவல்கள் கீதா!
என் சிறு பதிவுக்கு கனதியும் காத்திரமும் சேர்த்து முழுமையாக்கினீர்கள். நன்றி என் இனிய மனதுக்கும் அறிவுக்கும் சுகம் சேர்க்கும் தோழிக்கு!
Post a Comment