Sunday, March 4, 2012

தன்னை அறியும் விஞ்ஞானம் - முன்னுரை

இது முன்னுரைக்கு ஒரு முன்னுரை

என் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய கடல் கடந்த நாடொன்றில் இருக்கும் என் மச்சாள் திருமகளின் விருப்பத்துக்கிணங்க இந்தப் பகுதியில் “தன்னை அறியும் விஞ்ஞானம்” என்ற சுவாமி பிரபு பாதாவின் இப்போது கைக்குக் கிட்டாத தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் இந்தப் பக்கத்தில் சிறிது சிறிதாக வரவிருக்கிறது.எல்லோருக்கும் அது பயனுடயதாக இருக்கும் என்பது என் எண்ணம்.

தன்னை அறியும் விஞ்ஞானம்

அ.ச. பக்தி வேதாந்த சுவாமி பிரபு பாதா;
ஸ்தாபக ஆச்சாரியர்;
அகில உலக கிருஷ்ன பக்தி இயக்கம்.

தமிழாக்கம்; திரு.கே.ராமசுப்பிரமணியம் 1987.






பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் (BBT)
Subsidised by Australian BBT

முன்னுரை

தெய்வத்திரு.அ.ச. பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்கள் நான் சந்தித்த மனிதர்களில் எல்லாம் மிகச் சிறப்பாகத் தனித்து விளங்கியவர் என்பதை நான் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன்.அவருடனான என் முதல் சந்திப்பு நியுயோர்க் மாநகரில் 1966ம் ஆண்டின் கோடைப் பருவத்தில் நிகழ்ந்தது. கீழ் மன்ஹட்டனின் பெளரியில் ‘ஒரு வயதான இந்திய சுவாமிகள்’ஆற்றும் உரையைக் கேட்க வேண்டும் என்று என் நண்பர் ஒருவர் அழைப்பு விடுத்திருந்தார். அப்பகுதியில் ஒரு சுவாமிகள் என்ன பேசப்போகிறார் என்ற ஆவலினால் உந்தப் பட்டு நான் அங்கு சென்றேன் .இருண்டிருந்த மாடிப்படியில் நான் தடவித் தடவி ஏறிச் செல்ல மணியோசை போன்ற ஒரு சீரான ஒலி மேலும் மேலும் உயர்ந்து தெளிவாகக் கேட்டது. இறுதியில் நான் நான்காவது தளத்தை அடைந்து கதவைத் திறந்த போது அங்கே அவரைக் கண்டேன்.

நான் நின்றிருந்த இடத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் நீண்டு இருண்டிருந்த ஒரு அறையின் மறு கோடியில் ஒரு சிறு மேடையின் மீது அவர் அமர்ந்திருந்தார். அவரது முகமும் காவி உடையும் ஒரு சிறிய விளக்கின் ஒளியில் பிரகாசித்தன. வயதானவராகத் தோன்றினார். அறுபது இருக்கலாம் என நான் எண்ணினேன். கால்களை மடக்கி நேராக நிமிர்ந்து கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். அவரது தலை மளிக்கப் பட்டிருந்தது. அவரது சக்தி வாய்ந்த முகமும் சிவந்த நிறச் சட்டத்திலான மூக்குக் கண்ணாடியும் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை கற்றறிந்தாய்வதில் செலவிட்ட ஒரு சன்னியாசியின் தோற்றத்தை அவருக்களித்தன. அவரின் கண்கள் மூடியிருந்தன.சமஸ்கிருத மொழியில் ஒரு எளிய பிரார்த்தனை கீதத்தை அவர் இசைத்துக் கொண்டிருந்தார். அவரது கைகள் ஒரு மத்தளத்தை ஒலித்துக் கொண்டிருந்தன. அங்கு சிறிய எண்ணிக்கையில் கூடி இருந்தவர்களும் அவ்வப்போது அவருடன் சேர்ந்து ,அவரைப் பின் பற்றி,இசைத்தார்கள். அவர்களில் சிலர் கைகளில் வெங்கலத் தாளங்களை வைத்துக் கொண்டு தாளமிசைத்தார்கள். நான் முன்பு கேட்ட மணியோசை போன்ற ஒலி இந்தத் தாளங்கள் எழுப்பிய ஒலியே! இவை எல்லாம் என் மனதைக் கவர்ந்தன. பின் வரிசையில் அமைதியாக உட்கார்ந்து கீர்த்தனத்தில் சேர்ந்து பாட முயற்சித்த படி காத்திருந்தேன்.

ஒரு சில வினாடிகளுக்குப் பின்பு சுவாமி ஆங்கிலத்தில் உரையாற்றத் துவங்கினார். அவரின் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய சமஸ்கிருதப் புத்தகத்தைப் பார்த்தபடி அவர் பேசுவதாகத் தெரிந்தது. அவ்வப்போது அப்புத்தகத்தில் இருந்து மேற்கோள்களைப் படித்துச் சொன்னார். ஆனால் பெரும்பாலும் ஞாபகத்தில் இருந்தே பேசினார். அம் மொழியின் ஒலி இனிமையாக இருந்தது. ஒவ்வொரு செய்யுளையும் மிகக் கவனமான விளக்கங்களுடன் எடுத்துச் சொன்னார்.

அவரது பேச்சில் பாண்டித்தியம் தொனித்தது. அவரது சொற்செறிவில் நுணுக்கமான தத்துவார்த்த சொற்தொடர்களும் குறிப்புச் சொற்களும் இழையோடின. நளினமான கையசைப்புகளும் உயிரோட்டம் நிறைந்த முக பாவங்களும் அவரது சொற்பொழிவுக்கு பெரும் அழுத்தத்தைத் தந்தன. அதுவரை நான் கேட்டிராத அளவிற்கு கனமான கருத்துக்களை அவர் வழங்கிக் கொண்டிருந்தார்.”நான் இந்த உடலல்ல: நான் ஒரு இந்தியனல்ல; நீங்கள் அமெரிக்கர்கள் அல்ல; நாம் எல்லோரும் ஆண்மாக்கள்...”

சொற்பொழிவு முடிவுற்ற பின் ஒருவர் இந்தியாவில் அச்சான துண்டுப் பிரசுரம் ஒன்றை என்னிடம் தந்தார். அதிலிருந்த ஒரு புகைப்படத்தில் இந்தியாவின் பிரதான மந்திரியான லால்பகதூர் சாஸ்திரியிடம் சுவாமிகள் தன் மூன்று புத்தகங்களைத் தருவது காணப்பட்டது. படத்திற்கான விளக்கத்தில், இந்திய அரசின் எல்லா நூலகங்களும் அந்தப் புத்தகங்களை வாங்க வேண்டுமென்று சாஸ்திரி அவர்கள் உத்தரவிட்டதாகச் சொல்லப்பட்டிருந்தது. மற்றொரு சிறு வெளியீட்டில் பிரதான மந்திரி சாஸ்திரி அவர்கள் “தெய்வத் திரு அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா மாபெரும் பணியாற்றி வருகிறார்கள். மனித குலத்தை உய்விப்பதில் அவரின் நூல்கள் பெரிதும் உதவும் என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றின் பிரதிகளை நான் வாங்கினேன்.இந்தியாவில் இருந்து சுவாமிகள் அவற்றைக் கொண்டுவந்திருந்ததாக நான் அறிந்தேன்.அவற்றின் அட்டைகளில் காணப்பட்ட விவரங்களையும், அந்தத் துண்டுப் பிரசுரத்தையும் மற்ற பல துண்டுப் பிரசுரங்களையும் படித்த பிறகு இந்தியாவின் பெரு மதிப்பிற்குரிய ஆத்மீகத் தலைவர்களில் ஒருவரை அப்போது சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றதை நான் உணர்ந்தேன்.

ஆனால் இத்தனை தகுதிகள் வாய்ந்த ஒரு மகான் ஏன் எல்லா இடங்களையும் விட்டு விட்டு, பெளரியில் வாசம் செய்து கொண்டு உரையாற்றி வருகிறார் என்பது எனக்குப் புரியாமல் இருந்தது. நிச்சயமாக அவர் நன்கு கற்றுணர்ந்தவர். இந்திய உயர்குடியில் பிறந்தவர் என்பது அவரது தோற்றத்தில் தெரிந்தது. அவர் ஏன் இப்படி ஏழ்மையில் வாழ்கிறார்? எதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறார்? பல நாட்களுக்குப் பிறகு, ஒரு பிற்பகல் நேரத்தில்,அவரைப் பார்த்து விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் நோக்கோடு அங்கு சென்றேன்.

ஸ்ரீலஸ்ரீ பிரபுபாதா அவர்கள் (பிற்காலத்தில் நான் அவரை இப்படித்தான் அழைத்து வந்தேன்) என்னுடன் உரையாட நேரம் ஒதுக்கியது எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. நாள் முழுவதும் என்னுடன் உரையாட அவர் ஆயத்தமாக இருந்ததாகவே எனக்குத் தோன்றியது. அவர் அன்புடனும் நட்புறவுடனும் என்னுடன் பேசினார். 1959ல் இந்தியாவில் தான் சன்னியாசம் மேற்கொண்டதையும்,ஆனால் தன் சேவைகளுக்காகப் பணத்தைத் தம்மோடு எடுத்துச் செல்வதோ சம்பாதிப்பதோ கூடாது என்பதையும் எனக்கு விளக்கமாகச் சொன்னார். பல ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தன் படிப்பை முடித்து, பின்பு குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு, அதன் பின் குடும்பப் பொறுப்புகளையும் வியாபாரத்தையும் பழமையான வேதப் பண்பாட்டின் படி தன் மூத்த மகன்களிடம் ஒப்படைத்து விட்டு, சன்னியாசத்தை மேற்கொண்டு ஒரு இந்தியச் சரக்குக் கப்பலில் (சிந்தியா கப்பல் கம்பனியின் ஜலதூதா என்ற பெயருடய கப்பல்) இனாமாகப் பயணம் செய்து இங்கு வந்ததையும் எனக்கு விபரமாகச் சொன்னார்.1965ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் அவர் பாஸ்டனுக்குக் கப்பல் ஏறிய போது அவரிடம் இருந்ததெல்லாம் ஏழு டொலர் மதிப்பிலான பணமும் ஒரு பெட்டி நிறையப் புத்தகங்களும்,ஒரு சில துணிகளுமே. அவரது குருநாதரான தெய்வத் திரு பக்தி சித்தாந்த சரஸ்வதி டாகூரா அவர்களின் கட்டளைப்படி, இந்தியாவின் வேதப் படிப்பினைகளை ஆங்கிலம் பேசும் உலகத்தில் பரப்புவதற்காக அவர் தமது அறுபத்தொன்பதாவது வயதில் அமெரிக்கா வர நேரிட்டது. அமெரிக்கர்களுக்கு இந்திய இசை,சமையல்கலை,மொழிகள், மற்ற பல கலைகள் ஆகியவற்றைக் கற்பிக்க விரும்புவதாக அவர் சொன்னார். நான் சிறிது ஆச்சரியமடைந்தேன்.

ஸ்ரீல பிரபுபாதா ஒரு சிறு மெத்தையில் படுத்துறங்கியதையும், அவரது துணிகள் அறையின் பின் புறத்தில் கொடியில் கோடையின் வெப்பத்தில் உலர்த்தப் பட்டிருப்பதையும் கண்டேன்.அவற்றை அவர் தம் கையினாலேயே துவைத்து வந்தார். தம் உணவை,அவராகவே சாதுரியமாக வடிவமைத்த பாத்திரங்களில் தாமே சமைத்து வந்தார். சமையலுக்கு அவர் பயன் படுத்திய அந்த நான்கடுக்குப் பாத்திரத்தில் ஒரே சமையத்தில் நான்கு உணவு வகைகளைத் தயார் செய்ய முடிந்தது. அவரைச் சுற்றியும், மற்றொரு பக்கத்தில் இருந்த டைப் ரைட்டரைச் சுற்றியும் எண்ணற்ற எழுத்துப் பிரதிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர் விழித்திருந்த நேரம் முழுவதையும் (அது ஒரு நாளில் 20 மணி நேரம் என பின்நாளில் அறிய வந்தேன்)
நான் வாங்கியிருந்த மூன்று புத்தகங்களுக்குப் பின்னான தொடர் நூல்களை டைப் செய்வதில் செலவிட்டார். அந் நூல் ஸ்ரீமத் பாகவதம் என்று அழைக்கப் பட்டு அறுபது புத்தகங்களாக வெளிவரத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்நூலை ஆண்மீக வாழ்வு பற்றிய களஞ்சியம் என்று சொல்ல வேண்டும்.

அந்த நூல் வெளியீட்டு முயற்சி வெற்றி பெற வேண்டும் என்ற என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர் சனிக்கிழமைகளில் நடத்திய சமஸ்கிருத வகுப்புகளுக்கும் திங்கள், புதன்,வெள்ளி ஆகிய நாட்களில் மாலைகளில் நடத்திய உரை நிகழ்ச்சிகளுக்கும் வரும்படி என்னை அழைத்தார். அவரின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, அவரின் நம்பற்கரிய உறுதிப்பாட்டை வியந்தபடி புறப்பட்டேன்.

சில வாரங்களுக்குப் பின்பு ஜூலை 1966 - ல் ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் சிறிது மேம்பட்ட சூழ்நிலையில் இருந்த ஒரு இடத்திற்கு மாற்றிச் செல்ல அவருக்கு உதவும் நற்பேறு எனக்குக் கிட்டிற்று. என் நண்பர்கள் சிலரும் நானுமாகச் சேர்ந்து, அந்தக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் ஓர் அறையையும் இரண்டாவது தளத்தில் ஒரு சிறிய முற்றத்தை அடுத்த ஒரு அறையையும் ஏற்பாடு செய்தோம். சொற்பொழிவுகளும் சங்கீர்த்தனமும் தொடர்ந்து நடைபெற்றன. இரண்டு வாரங்களுக்குள் விரைவாக வளர்ந்து வந்த அன்பர்களின் கூட்டம், அதற்குள் ஆலயமாக மாறியிருந்த கீழ் தள அறைக்கும் இரண்டாவது தள அறைக்குமான செலவுக்கு வகை செய்தன. இதற்குள் ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் துண்டுப்பிரசுரங்களை அச்சடித்து விநியோகிக்கும் படி தனது அனுதாபிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். கிரமபோன் ரெக்கார்ட் கம்பனி உரிமையாளர் ஒருவர் ஹரேகிருஷ்ன மந்திர உச்சாடனத்தை ஒலிப்பதிவு செய்ய ஸ்ரீலபிரபுபாதாவை அழைத்தார். அந்த ஒலிப்பதிவு பெரும் வெற்றியாகத் திகழ்ந்தது. அந்தப் புதிய இடத்தில் அவர் வேதாந்த தத்துவம் இசை,ஜபம்,தியானம்,நுண்கலை,சமையல்கலை ஆகிய எல்லாவற்றையும் கற்பித்து வந்தார். கீர்த்தனமும் செய்தார். முதலில் அவரே சமையல் செய்தார். அவர் எப்போதும் தாமே முன்மாதிரியாக இருந்து கற்பிப்பிதற்கு விரும்பினார். அதன் விளைவாக அது வரை நான் அனுபவித்திராத மிகச் சுவையான மரக்கறி உணவை நான் உண்டேன். (ஸ்ரீல பிரபுபாதா தாமே பரிமாறவும் செய்தார்!) அரிசியிலான ஒரு தயாரிப்பு, காய்கறிப் பதார்த்தம் ஒன்று, சப்பாத்திகள், ’தால்’எனும் பருப்புத் தயாரிப்பு இவை பொதுவாக உணவில் இடம்பெற்றன. ருசிக்கான பொருட்களைக் கலக்கும் விதம்,சமையலுக்கான நெய்,இவற்றில் நன்கு கவனம் செலுத்தப்பட்டு சரியான அளவிலான சூட்டில் மிகக் கவனமாகச் சமையல் செய்யப்பட்டதால் அதுவரை நான் கண்டிராத சுவையான உணவு எங்களுக்குக் கிடைத்தது. ’பிரசாதம்’ (அதாவது பிரபுவான இறைவனின் கருணை) என்றழைக்கப்பட்ட அந்த உணவு பற்றிப் பிறர் கொண்டிருந்த கருத்தும் என் கருத்தும் மிக உறுதியாக ஒத்திருந்தன. புராதன இந்தியப் பாணியில் சித்திரம் தீட்டும் கலையை ‘அமைதிப் படை’ ஊழியர் ஒருவர் ( அவர் சீன மொழியிலும் தேர்ந்தவர்) ஸ்ரீல பிரபுபாதாவிடம் கற்று வந்தார். அவரது முதல் சித்திரங்களின் உயர்ந்த தரத்தைக் கண்டு நான் ஆச்சரியப் பட்டேன்.




தத்துவ சாஸ்திரம் பற்றிய விவாதங்களிலும் தர்க்க சாஸ்திரத்திலும் அவர் அயராதவராகவும் வெல்ல முடியாதவராகவும் விளங்கினார். மொழிபெயர்ப்புப் பணியை நிறுத்தி விட்டு விவாதங்களில் ஈடுபடுவார். விவாதங்கள் எட்டு மணிநேரம் கூட தொடர்ந்து நடை பெறும்.
மிகச் சுத்தமாக வைக்கப் பட்டிருந்த சிறிய அறையில் அவர் தம் அலுவல்களைக் கவனித்து வந்தார். உண்டு உறங்கி வந்தார். இரண்டங்குல பருமனிலான ஃபோம் மெத்தையில் அவர் உறங்கினார். அந்தக் குறுகிய அறைக்குள் சில வேளைகளில் ஏளெட்டு நபர்கள் நெருக்கமாக அமைர்ந்திருப்பார்கள். ’எளிய வாழ்வும் உயர்ந்த சிந்தனையும்’என்ற சித்தாந்தத்தை அவர் இடை விடாது வலியுறுத்தியதுடன் அப்படியே வாழ்ந்தும் காட்டினார். ஆன்மீகமாக வாழ்வதென்பது பகுத்தறிவு பூர்வமாகவும் தர்க்கபூர்வமாகவும் நிரூபிக்கக் கூடியது. வெறும் மனத்தோற்றமோ மூட நம்பிக்கையோ அல்ல என்பதை அவர் வலியுறுத்தினார். அவர் ஒரு மாதாந்திரப் பத்திரிகையைத் துவக்கினார். 1966ன் இலையுதிர் பருவத்தில் ‘நியூயோர்க் டைம்ஸ்’என்ற பத்திரிகை அவரையும் அவர்களது சீடர்களையும் பற்றி கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதற்குச் சிறிது பின் டெலிவிஷன் குழுவினர் அவரைப் பற்றிய செய்திப் படத்தை ஒளிபரப்பினார்கள்.

ஸ்ரீல பிரபுபாதாவுடம் பழகுவதென்பது எழுச்சி மிக்க அனுபவம். யோகம் பயின்று பயன் பெறவேண்டும் என்ற என் தனிப்பட்ட ஆவல் காரணமாகவோ அல்லது அவரிடம் எனக்கேற்பட்டிருந்த பசுமையான கவர்ச்சி காரணமாகவோ அவரின் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியையும் கவனித்தறியும் ஆவல் என்னில் ஏற்பட்டிருந்தது. தன் பணியை விரிவு படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட திட்டங்கள் துணிச்சலானவையாகவும் எதிர்பாராத வகையிலும் அமைந்திருந்தன. ஆனால் அவை எல்லாம் தவறாமல் அமோகமாக வெற்றியடைந்து வந்தன. எழுபது வயதை எட்டியிருந்த அவர் அமெரிக்காவுக்குப் புதியவர். வெறுங்கையோடு வந்தவர் என்றாலும் ஒரு சில மாதங்களுக்குள் தன்னந்தனியாக ஒரு இயக்கத்தைத் தொடக்கி விட்டார். அது எண்னற்கரிய மாபெரும் சாதனை.

ஒரு ஆகஸ்ட் மாதம் காலை வேளையில் ஸ்ரீலபிரபுபாதா சொன்னார்; ’இன்று கிருஷ்னபரமாத்மா தோன்றிய நாள். இருபத்துநான்கு மணிநேரம் உபவாசம் இருந்து ஆலயத்தினுள் தங்குவோம்.’ அன்று மாலையில் இந்தியாவில் இருந்து சில பயணிகள் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் இவ்வுலகின் மறுபக்கமாகிய அந்த இடத்தில் இந்தியாவின் ஒரு சிறு பிரதிபலிப்பைக் கண்டதால் ஏற்பட்ட புளகாங்கிதத்தை கண்களில் நீர்மல்க விவரித்தார். அதை அவர் சொற்பனத்தில் கூட எண்னிப்பார்த்திருக்க முடியாது என்று சொன்னார். ஸ்ரீல பிரபுபாதாவுக்கு தம் புகழஞ்சலியையும் ஆழ்ந்த நன்றியையும் தெரிவித்து நன்கொடை அளித்து அவரின் பாதங்களில் சிரம் தாழ்த்தி வணங்கினார். நாங்கள் எல்லோரும் மனம் நெகிழ்ந்து போனோம். பின்னர் ஸ்ரீல பிரபுபாதா அவர்களுடன் இந்தியில் உரையாடினார்.
அதனால் அவர் சொன்னது எனக்குப் புரியவில்லை. ஆனால், அவரின் ஒவ்வொரு முகபாவமும் அசைவும் மனித ஆத்மாவின் உள் மையத்தை தொடுவதை என்னால் உணரமுடிந்தது.

அந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் ஸான்பிரான்சிஸ்கோவில் இருந்த போது ஸ்ரீல பிரபுபாதாவுக்கு அவரது முதல் விமானப் பயணத்திற்கான சீட்டை அனுப்பினேன். அவர் நியூயோர்க்கில் இருந்து பறந்து வந்தார். விமான நிலையத்தில் கூடியிருந்த ஒரு சிறு குழு ’ஹரேகிருஷ்னா’ மந்திரத்தை இசைத்து அவரை வரவேற்றது. கோல்டன் கேட் பார்க்கின் கிழக்கு மூலையில் நியூயோர்க்கில் உள்ளது போலவே நாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஆலயத்திற்கு நாங்கள் அவரை அழைத்துச் சென்றோம். (அங்கு அவருக்கு வாடகைக்கு ஒரு அறையையும் அமர்த்தியிருந்தோம்) இப்படி நாங்கள் ஒரே வகையிலான அமைப்பை ஏற்படுத்தியிருந்ததைக் கண்டு ஸ்ரீல பிரபுபாதா பரவசமடைந்தார்.

சில வாரங்களுக்குப் பின் முதன் முதலாக இந்தியாவில் இருந்து சன்பிரன்சிஸ்கோ கோவிலுக்கு மிருதங்கம் வந்து சேர்ந்தது. ஸ்ரீல பிரபுபாதாவின் அறைக்குச் சென்று அவருக்கு இதை நான் தெரிவித்த போது அவரின் கண்கள் மலர்ந்தன. உடனே கீழே சென்று அந்தப் பெட்டியைத் திறக்கும் படி அவர் உணர்ச்சி மிகுந்த குரலில் என்னிடம் சொன்னார். லிஃப்ட் மூலம் நான் கீழ்தளத்தை அடைந்த போது ஸ்ரீல பிரபுபாதாவை அங்கு நான் கண்டேன். மிருதங்கத்தைக் காணவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் அவர் லிஃட்டுக்காகக் காத்திராமல் மாடிப்படிகளில் இறங்கி அங்கு வந்திருந்தார். பெட்டி திறக்கப் பட்டவுடன் அவர் தமது காவியுடையிலிருந்து ஒரு பகுதியைக் கிழித்து, மிருதங்கம் வாசிக்கப்படும் இரு பகுதிகளையும் மறைக்காதபடி அதைச் சுற்றி அந்தத் துணியைக் கட்டி ,’இதை இனி அகற்றக்கூடாது’ என்றார். பின்பு மிருதங்கம் வாசிப்பது எப்படி, அதை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றி எங்களுக்கு விளக்க ஆரம்பித்தார்.

மேலும், 1967ல் ஸ்ரீல பிரபுபாதா சன்பிரான்சிஸ்கோவில் ரத யாத்திரையைத் துவக்கி வைத்தார். இன்று உலகின் பலபகுதிகளில் இந்த ரத உற்சவம் நடைபெறுகின்றதென்றால் அதற்கு நாம் அவருக்கு நன்றி சொல்லவேண்டும். இந்தியாவின் ஜகன்னாத் புரியில் ரத யாத்திரை இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆண்டு தோறும் நடை பெறுகிறது. 1975 வாக்கில் சான் பிரன்சிஸ்கோவில் இது மிகவும் பிரபலமடைந்து. அந் நகரின் மேயர் சான் பிரன்சிஸ்கோவின் ரத யாத்திரை தினத்தைப் பிரகடனம் செய்தார்.

1966ன் பிற்பகுதியில் ஸ்ரீல பிரபுபாதா சீடர்களை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினார். யாரும் அவரைக் கடவுளாகக் கருதக் கூடாதென்றும் கடவுளின் சேவகனாக மட்டும் எண்ண வேண்டும் என்றும் அவர் உடனடியாகக் குறிப்பிட்டார். தம்மைத் தாமே குருவாகப் பிரகடனப் படுத்திக் கொண்டு தம்மைக் கடவுளாகக் கருதி சீடர்கள் வழிபடுவதை அனுமதிக்கும் குருமார்களை அவர் கண்டனம் செய்தார்.’இந்தக் கடவுள்கள் எல்லாம் மிக மலிவானவர்கள்’ என்று அவர் சொல்வதுண்டு. ஒரு நாள் யாரோ அவரை ‘நீங்கள் கடவுளா’ என கேட்ட போது, ஸ்ரீல பிரபுபாதா கூறினார், ’இல்லை நான் கடவுள் இல்லை; கடவுளின் சேவகன். பின்பு ஒரு கணம் யோசித்து விட்டு அவர் மேலும் கூறினார்; ‘உண்மையில் நான் கடவுளின் சேவகனுமல்ல; சேவகனாக முயற்சிக்கிறேன் அவ்வளவே. கடவுளின் சேவகனாக ஆவது அவ்வளவு சாதாரண காரியமல்ல.’

1970 -ன் மத்திய காலத்தில் ஸ்ரீல பிரபுபாதாவின் மொழிபெயர்ப்புப் பணி அதிசயிக்கத் தக்க அளவு அதிகமாகியது. உலகம் முழுவதிலும் அறிஞர்கள் அவருடய நூல்களுக்குப் புகழாரம் சூட்டினார்கள். அமெரிக்காவில் அநேகமாக எல்லாப் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் அவரின் நூல்களை அங்கீகரிக்கப் பட்ட பாட நூல்களாக ஏற்றுக் கொண்டன. ஒட்டு மொத்தம் அவர் எண்பது நூல்கள் வரை எழுதினார். அவைகளை அவரின் சீடர்கள் இருபத்தைந்து மொழிகளில் மொழிபெயர்த்து ஐம்பத்தைந்து மில்லியன் பிரதிகள் வரை விநியோகித்துள்ளார்கள். உலகம் முழுவதிலுமாக அவர் 108 ஆலயங்களை நிறுவினார். அவரிடம் தீட்சை பெற்ற சீடர்கள் பத்தாயிரம் வரை உள்ளனர். கோடிக் கணக்கானவர்கள் அவரை ஏற்றுக் கொண்டு ஆலயங்களில் குழுமுகின்றார்கள். அவர் இந்த உலகில் வாழ்ந்த எண்பத்தொரு ஆண்டுகளில் இறுதி நாட்கள் வரை எழுதிக் கொண்டும் மொழிபெயர்த்துக் கொண்டுமிருந்தார்.

ஸ்ரீல பிரபுபாதா மற்றுமொரு கீழ் நாட்டு தத்துவ ஞானி, குரு, ஆண்மீகி, யோகாசிரியர் என்றிருந்தார் என்று சொல்வதற்கில்லை. அவர் ஒரு முழுமையான கலாசாரத்தின் அவதாரமாக விளங்கி ,அந்தக் கலாசாரத்தை மேலை நாடுகளில் வேரூன்றச் செய்தார். உண்மையான அக்கறையுடன் பிறரின் நலனுக்காக தன் சொந்த நலன்கள் முழுவதையும் தியாகம் செய்தவர்களில் முதன்மையானவர் என்று நானும் மற்றும் பலரும் கருதுகிறோம். அவர் தமக்காக வாழாமல் பிறருக்காக மட்டும் வாழ்ந்தார். ஆண்மீக விஞ்ஞானம், தத்துவம், பொது அறிவு, கலைகள், மொழிகள், வேத முறைப்படியான வாழ்க்கை, சுத்தம், சத்துணவு, மருந்து, நன்னடத்தை, குடும்பவாழ்க்கை, விவசாயம், சமூக அமைப்பு, கல்வி, பொருளாதாரம் - மேலும் பல விஷயங்களையும் அவர் கற்பித்தார். நான் அவரை ஆசானாகவும் அன்பிற் சிறந்த நண்பனாகவும் காண்கிறேன்.

ஸ்ரீல பிரபுபாதா அவர்கட்கு நான் மிகவும் கடன் பட்டிருக்கிறேன். அந்தக் கடனை நான் என்றும் திருப்பிச் செலுத்த முடியாது. ஆனால் அவரின் உள்ளார்ந்த விருப்பமான நூல்கள் வெளியிடுவதையும் விநியோகிப்பதையும் நிறைவேற்றுவதில் அவரைப் பின்பற்றுபவர்களோடு இணைந்து செயற்படுவதன் மூலம் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளலாம்.



ஒரு முறை ஸ்ரீல பிரபுபாதா சொன்னார்.’நான் என்றும் மடிவதில்லை.என் நூல்களில் என்றென்றும் வாழ்வேன்’ நவம்பர் 14 1977 - ல் அவர் இவ்வுலகை நீத்தார்.ஆனால் நிச்சயமாக அவர் என்றென்றும் வாழ்வார்.

- மைக்கேல் கிராண்ட் -
(முகுந்த தாஸ)





தொடரும்....

4 comments:

நிலாமகள் said...

இந்தப் பகுதியில் “தன்னை அறியும் விஞ்ஞானம்” என்ற சுவாமி பிரபு பாதாவின் இப்போது கைக்குக் கிட்டாத தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் இந்தப் பக்கத்தில் சிறிது சிறிதாக வரவிருக்கிறது.எல்லோருக்கும் அது பயனுடயதாக இருக்கும் //

ப‌ருத்தி புட‌வையாய் காய்த்த‌து எம‌க்கு!

யசோதா.பத்மநாதன் said...

மகிழ்ச்சி நிலா.

இராஜராஜேஸ்வரி said...

’நான் என்றும் மடிவதில்லை.என் நூல்களில் என்றென்றும் வாழ்வேன்’ நவம்பர் 14 1977 - ல் அவர் இவ்வுலகை நீத்தார்.ஆனால் நிச்சயமாக அவர் என்றென்றும் வாழ்வார்.

அருமையான ஆக்கம்.. அறியத்தந்த சிரப்பான பகிர்வுகளுக்கு நன்றிகள்.. பாராட்டுக்கள்.

யசோதா.பத்மநாதன் said...

இது தொடர்ந்து வரும் என் ‘செந்தாமரைத் தோழி’ ராஜராஜேஸ்வரி!

நான் படித்துப் பயன் பெற்ற ஒரு புத்தகம்!