Sunday, March 21, 2010
வள்ளுவன் வழி
வள்ளுவம் தமிழனின் வாழ்க்கை முறை.தமிழனின் பண்பாடு.தமிழ் செல்வம்.சிறந்த வாழ்க்கை நூல். நல் வழிகாட்டி.
பண்பட்ட உள்ளம் கொண்டவர் பண்பாடு உடையவர் ஆவார்.உள்ளத்தினின்று வெளிப்படுவன அத்தகைய இயல்புகள்.சொல்லாலும் செயலாலும் அவை வெளிப்படும்.ஒருவரின் குணம் நடத்தைகள்,இயல்புகள், நம்பிக்கைகள்,மற்றவர்களோடு பழகும் முறை,வாழ்க்கையைப் பற்றிய அவரின் எண்ணம்,சிந்தனைகள், விழுமியங்கள் இவைகள் எல்லாம் உள்ளத்தினின்றும் எழும் இயல்புகள்.அவை பண்பாடாகும்.
அப்படியென்றால் தமிழனுடய பண்பாட்டு வாழ்க்கை முறை தான் என்ன? திருக்குறளை இயற்றிய வள்ளுவர் 1330 சொற்செறிவுள்ள 2 அடிப் பாடல்களில் அழகாக அதனைப் பாடியுள்ளார்.
அன்போடும் அறத்தோடும் வாழும் வாழ்வு நமது என்கிறது அந்தத் திருக்குறள் என்னும் தமிழ் மறை.
விருந்தினரை உபசரித்தல்,இனிய வார்த்தைகளைப் பேசுதல்,செய் நன்றி அறிதல்,நடுவு நிலைமையோடிருத்தல்,அடக்கம், ஒழுக்கம்,பொறுமை, வெகுளாமை,கொல்லாமை, பொறாமை கொள்ளாமை,மற்றவர்களை இகழாமை,மன ஒருமைப்பாடு,தர்மத்தின் வழி நிற்றல்,பிறர் பொருளுக்கு ஆசை கொள்ளாமை,தீயனவும் பயனற்றதுமான வார்த்தைகளைப் பேசாமை,ஈகை,வாழ்வின் நிலையாமையை உணர்தல், இரக்கம்,ஒப்புரவு,வாய்மை - இவைகள் வள்ளுவம் கூறும் அறங்களாகும்.
இவற்றை அன்போடு செய்தலே தமிழனின் பண்பாடாகும்.
அவை எக்காலத்துக்கும் எவ்வுயிர்க்கும் எப் பருவத்துக்கும் பொருந்திப் போவன.அப்படியென்றால் குறிப்பாக மாணாக்கர்களாகிய எமக்கு அவர் என்ன கூறுகிறார்?
'எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் - அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு'
என்று கூறுகிறார்.இதன் பொருள் என்னவென்றால்,எந்த ஒரு விடயம் பற்றியும் யார் யார் எவ்வாறு எடுத்துக் கூறினாலும் கூறியவர் யார் என்பது பற்றி யோசிக்காமல் கூறப்பட்ட விடயத்தில் இருக்கின்ற உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிவதே உண்மையான அறிவு என்பதாகும்.
அதனால்,அறிவுத் தேட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணாக்கர்களாகிய நாம் வள்ளுவன் வழி நின்று அன்போடும் அறத்தோடும் மெய்ப்பொருள் கண்டு வாழ்வோம்.
"வெள்ளத்து அனைய, மலர் நீட்டம்;மாந்தர் தம்
உள்ளத்து அனையது, உயர்வு"
(மாணவர்களுக்காக 21.03.10 அன்று எழுதியது)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமை
Post a Comment