Saturday, March 21, 2009

இலக்கியத்தில் வாழ்க்கைச் செல்வம்

உள்ளம் பெரும் கோயில்:-

"வெண்ணையுற்று நெய்தேட வேண்டுமோ? தீபமுற்று
நண்ணு கனல் தேடல் நன்றாமோ? - என் மனத்தை
நாடிச் சிவன் இருக்க, நாடாமல் ஊர் தோறும்
தேடித் திரிவதென்ன செப்பு?"

இதன் பொருள்;

கையில் வெண்ணை இருக்கும் போது நெய் தேட வேண்டியதில்லை.விளக்கு இருக்கும் போது தீயினைத் தேடுதல் நன்றோ? தன்னை தியானிக்கின்ற மனதில் விரும்பி தங்கச் சிவனிருக்க,அவரை உள்ளத்தில் தேடிக் காணாமல் தலங்கள் தோறும் தேடுவது ஏனென்று சொல்வாயாக!


நல்லோரும் தீயோரும்:-

"நல்லவர்கள் வாயால் நவிலுமொழி பொய்யாமல்,
'இல்லை'யெனாது உள்ளமட்டும் ஈவார்கள் - நல்லகுணம்
அல்லவர்கள் போ,வா என்று சொல்லி நாள் கழித்தே
'இல்லை'என்பார் இப் பாரினிலே"

இதன் பொருள்;

நல்ல இயல்புடயவர்கள் தம்முடய சொற்களை காத்து,இரப்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாது உள்ளவற்றைக் கொடுப்பார்கள்.தீய குணம் உள்ளவர்கள் இரப்பவர்களை போங்கள், வாருங்கள் என்ற சொற்களைக் கூறி, வீணாகக் காலதாமதம் செய்து, கடைசியாக 'இல்லை' என்று சொல்வார்கள்.


நல்லோர் பண்பு:-

"ஞானம்,பெருமை,நயம், கருணை,உண்மை,அபி
மானம்,பொறுமை,வணக்கம்,உயர் - தானமுடன்,
சற்குணம்,ஆ சாரம்,தகுகல்வி,நீதிநெறி
சற்குணருக்கு உண்டு என்றே சாற்று"

இதன் பொருள்;

அறிவு,பெருமை,நேர்மை,இரக்கம்,பற்று,பொறுமை,பணிவு,மேலான ஈகை என்பவற்றோடு நல்ல தன்மை,ஒழுக்கம்,தக்கபடிப்பு,அறநெறிநாட்டம் என்பன நற்குணம் உடையவர்களிடத்து உள்ள நல்ல பண்புகளாகும்.

பாடிய புலவர்:-
அருணாசலக் கவிராயர்.
(கி.பி.1712 - 1779 )

6 comments:

soorya said...

இப்போதான் கண்ணுற்றேன்.
நல்ல பதிவுகள்.
ன.ண, பற்றிக் கவனம் எடுக்கவும்.
இல்லையெனாதா...இல்லையெணாதா..
,,,,,
நான் ஒன்றும் பண்டிதன் இல்லை, என்றாலும் கண்ணுற்றவற்றைச் சொல்லாமல் இருக்க முடிவதில்லை.

யசோதா.பத்மநாதன் said...

மிகவும் நன்றி சூரியா. நிச்சயம் கவனம் எடுக்கிறேன்.நீங்கள் சொன்னது சரி.அது 'இல்லையெனாது' தான்.இப்போதே திருத்தி விடுகிறேன்.

தொடர்ந்து வாருங்கள்.தவறுகள் நேரும் போது தவறாமல் சுட்டிக் காட்டுங்கள்.மிக மகிழ்வுறுவேன்.

sooryakumar said...

http://kanavin-nadanankal.blogspot.com/
இங்கேயும் ஒரு தடவை வந்து பாருங்களேன்.

யசோதா.பத்மநாதன் said...

வந்தேன் சூர்யா.நேர்மையும் உண்மையும் மென்மையும் உள்ள கலைஞனைக் கண்டேன் அங்கு.கச்சிதமாகச் செதுக்கப் பட்ட கலை வடிவங்களூடாக!.

அறிமுகத்திற்கு நன்றி.

butterfly Surya said...

நல்ல பதிவுகள்.

அவசியமானவை. இத்தருணத்தில் தேவையானவையும்.

நிறைய எழுதுங்கள்.

வாழ்த்துகள் தோழி.

யசோதா.பத்மநாதன் said...

மகிழ்ச்சி நண்பரே. அடிக்கடி வாருங்கள்.