Tuesday, February 11, 2025

சுவாமி சிவானந்தரின் அருளுரைகள்

 எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது, எத்தனை தடவை மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டன, எத்தனை முறை விளக்குகள் ஏற்றப்பட்டு ஆராத்தி காண்பிக்கப்பட்டன, எத்தனை முறை மணி அடிக்கப்பட்டு மறை நூல்கள் வாசிக்கப் பட்டன போன்ற செயல்களைக் கொண்டு மனிதர்களைத் தெய்வீக அளவுகோல்கள் மதிப்பிடுவதில்லை.

அவரவர் உள்ளத்தில் எழும் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தும்; அவர்கள் எத்தகைய வார்த்தைகளைத் தங்களுடய அண்டை அயலாரிடம் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தும்; அவர்கள் தங்களுடய வாழ்வை யார் யாருடன் கழிக்க வேண்டும் என்று இறைவன் வித்தித்திருக்கிறானோ அவர்களுடன் அவர்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலைப் பொறுத்துமே தெய்வீக அளவுகோல்கள் மனிதர்களை மதிப்பிடுகின்றன.

நல்ல ஆரோக்கியமும் பொருளாதாரப் பாதுகாப்பும் மன அமைதிக்கு மிகவும் இன்றியமையாதவை. ஆனால் இவை இரண்டும் இருப்பினும் மக்களில் பலரும் தொடர்ந்தும் மன அமைதியின்றி அல்லற்படுகின்றனர். நம்முடய தொல்லைகள் பெரும்பாலும் நாமாகவே உண்டாக்கிக் கொண்டது என்பதால் அவைகள் பெரும்பாலும் தவிர்க்கப் படக் கூடியதே ஆகும்.

நாம் அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிடுகின்றோம். மற்றவர்கள் செய்வது தவறானதாகவும் இருக்கலாம். ஆனால், அதன் பொருட்டு நாம் அல்லல் படவேண்டிய அவசியமில்லை. யாரையும் எதையும் குறைகூற வேண்டிய அவசியம் இல்லை. பிறருக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தைக் கடவுள் நமக்குக் கொடுக்கவில்லை. எல்லோரும் அவரவர் விருப்பப்படி தான்  நடக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்குள் இயங்கும் இறைவன் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறார். 

மன அமைதியைப் பாதுகாக்க வேண்டுமானால் நாம் நம்முடய சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானதாகும்.


நன்றி: வேதாந்திரியம்; ஆண்மீக மாத இதழ்

ஜூலை 2018 பக்:14.

( இந்தச் சமய சஞ்சிகைகளைப்  படிக்குமாறு கரிசனையோடு தாயகத்தில் இருந்து நண்பி மூலமாகக் கொடுத்தனுப்பி வைத்த சேவையர் அங்கிளுக்கும் நன்றி )

வாழ்க வையகம்!

வாழ்க வளமுடன்!!


Monday, August 5, 2024

ஒரு கேள்வி ஒரு பதில்

 


மகள் தன் தந்தையிடம் எனக்கு ஒரே ஒரு அறிவுரைதான் உங்களால் சொல்ல முடியுமென்றால் அது என்னவாக இருக்கும் அப்பா அன்று கேட்டாள்.

அதற்கு தகப்பன்,’ மகளே! ஒரு போதும் யாரும் உன்னைப் பற்றிக் கடவுளிடம் முறைப்பாடு சொல்லாத மாதிரி நடந்து கொள்’ என்று கூறினார்.

( சமூக வலைத்தளத்தில் படித்தது.)

Friday, May 31, 2024

பேச்சும் தீர்வும்

 
பேசித் தீருங்கள்

பேசியே வளர்க்காதீர்கள்

உரியவரிடம் சொல்லுங்கள்

ஊரெல்லாம் சொல்லாதீர்கள்

சங்கடமாய் இருந்தாலும்

சத்தியமே பேசுங்கள்

எதிர்தரப்பும் பேசட்டும்

என்னெவென்று கேளுங்கள்

சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்

யாரோடும் பகையில்லாமல்

புன்னகைத்து வாழுங்கள்

ஏனென்றால்,

வாழ்க்கை குறுகியதும் மிகவும் அழகானதும் ஆகும்.

2021.12.21

-1.5.2024 அன்று இறைபதம் எய்திய என் தாயாரின் டையறிக் குறிப்பில் இருந்து. -

Wednesday, April 17, 2024

ஜீவாத்மா; அந்தராத்மா; பரமாத்மா




ஜீவாத்மா, அந்தராத்மா, பரமாத்மா விளக்கம் தேவை?

தான், எனது என்று சுய பற்றுக் கொண்டு, இல்லற சுகத்தில் ஈடுபட்டு, உலக விவகாரங்களில் மூழ்கி இருப்பவன் ஜீவாத்மா.

தாமரை இலைத் தண்ணீரைப் போன்று, இல்லற தர்மத்திலும், சுய கர்மத்திலும், பொருந்தியும் பொருந்தாமலும் வாழ்க்கை நடத்துபவன் அந்தராத்மா.

உலக விவகாரங்கள் அனைத்துக்கும் சூரியன் சாட்சியாக விளங்கவது போன்று, ஜீவாத்மா, அந்தராத்மாக்களின் விவகாரங்கள் அனைத்துக்கும் சாட்சியாக விளங்குபவன் பரமாத்மா.

- விடை தேடும் வினாக்கள் - தமிழருவி மணியன், பக்: 141

Thursday, April 4, 2024

வெற்றியின் இரகசியம் - செயல் நேர்த்தி

 ”உனது வாழ்வின் பணி எதுவாயினும் அதை மிக நன்றாகச் செய். உயிருடன் இருப்பவர், இறந்தவர், இதுவரை பிறக்காதவர் எவராயினும், அப்பணியை இதை விடச் சிறப்பாகச் செதிராத அளவுக்கு உன் பணியை நீ செய்ய வேண்டும்.

 தெருவைக் கூட்டும் பணி உனக்கு வாய்த்தாலும், மைக்கல் ஏஞ்சலோ ஓவியம் வரைந்தது போல், ஸேக்ஷ்பியர் கவிதை தீட்டியதிப் போல், பித்தோவன் இசையை உருவாக்கியதைப் போல், மிகச் சிறப்பாக நீ தெருவைக் கூட்ட வேண்டும்.

அந்த இடத்தைக் கடப்பவர் சற்று நின்று,’ஆஹா இந்தத் தெருவை மிகச் சுத்தமாகப் பெருக்கிய ஒரு மிகச் சிறந்த பணியாளன் இங்கே வாழ்ந்திருக்கிறான் என்று பெருமைபொங்கச் சொல்லும் அளவுக்கு நீ சுத்தமாகக் கூட்ட வேண்டும்” என்று சொன்னவர் மார்ட்டின் லூதர் கிங்.

எதைச் செய்தாலும் அதை முழு நிறைவுடன் ( Perfection) செய்வது தான் படைப்பின் இரகசியம்..

நன்றி: ’விடை தேடும் வினாக்கள்’ - தமிழருவி மணியன்.

பக்:59.

Thursday, September 28, 2023

நினைப்பும் நிகழ்வும்

 


                                                          Where focus goes Energy flows