Monday, August 5, 2024

ஒரு கேள்வி ஒரு பதில்

 


மகள் தன் தந்தையிடம் எனக்கு ஒரே ஒரு அறிவுரைதான் உங்களால் சொல்ல முடியுமென்றால் அது என்னவாக இருக்கும் அப்பா அன்று கேட்டாள்.

அதற்கு தகப்பன்,’ மகளே! ஒரு போதும் யாரும் உன்னைப் பற்றிக் கடவுளிடம் முறைப்பாடு சொல்லாத மாதிரி நடந்து கொள்’ என்று கூறினார்.

( சமூக வலைத்தளத்தில் படித்தது.)

Friday, May 31, 2024

பேச்சும் தீர்வும்

 
பேசித் தீருங்கள்

பேசியே வளர்க்காதீர்கள்

உரியவரிடம் சொல்லுங்கள்

ஊரெல்லாம் சொல்லாதீர்கள்

சங்கடமாய் இருந்தாலும்

சத்தியமே பேசுங்கள்

எதிர்தரப்பும் பேசட்டும்

என்னெவென்று கேளுங்கள்

சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்

யாரோடும் பகையில்லாமல்

புன்னகைத்து வாழுங்கள்

ஏனென்றால்,

வாழ்க்கை குறுகியதும் மிகவும் அழகானதும் ஆகும்.

2021.12.21

-1.5.2024 அன்று இறைபதம் எய்திய என் தாயாரின் டையறிக் குறிப்பில் இருந்து. -

Wednesday, April 17, 2024

ஜீவாத்மா; அந்தராத்மா; பரமாத்மா




ஜீவாத்மா, அந்தராத்மா, பரமாத்மா விளக்கம் தேவை?

தான், எனது என்று சுய பற்றுக் கொண்டு, இல்லற சுகத்தில் ஈடுபட்டு, உலக விவகாரங்களில் மூழ்கி இருப்பவன் ஜீவாத்மா.

தாமரை இலைத் தண்ணீரைப் போன்று, இல்லற தர்மத்திலும், சுய கர்மத்திலும், பொருந்தியும் பொருந்தாமலும் வாழ்க்கை நடத்துபவன் அந்தராத்மா.

உலக விவகாரங்கள் அனைத்துக்கும் சூரியன் சாட்சியாக விளங்கவது போன்று, ஜீவாத்மா, அந்தராத்மாக்களின் விவகாரங்கள் அனைத்துக்கும் சாட்சியாக விளங்குபவன் பரமாத்மா.

- விடை தேடும் வினாக்கள் - தமிழருவி மணியன், பக்: 141

Thursday, April 4, 2024

வெற்றியின் இரகசியம் - செயல் நேர்த்தி

 ”உனது வாழ்வின் பணி எதுவாயினும் அதை மிக நன்றாகச் செய். உயிருடன் இருப்பவர், இறந்தவர், இதுவரை பிறக்காதவர் எவராயினும், அப்பணியை இதை விடச் சிறப்பாகச் செதிராத அளவுக்கு உன் பணியை நீ செய்ய வேண்டும்.

 தெருவைக் கூட்டும் பணி உனக்கு வாய்த்தாலும், மைக்கல் ஏஞ்சலோ ஓவியம் வரைந்தது போல், ஸேக்ஷ்பியர் கவிதை தீட்டியதிப் போல், பித்தோவன் இசையை உருவாக்கியதைப் போல், மிகச் சிறப்பாக நீ தெருவைக் கூட்ட வேண்டும்.

அந்த இடத்தைக் கடப்பவர் சற்று நின்று,’ஆஹா இந்தத் தெருவை மிகச் சுத்தமாகப் பெருக்கிய ஒரு மிகச் சிறந்த பணியாளன் இங்கே வாழ்ந்திருக்கிறான் என்று பெருமைபொங்கச் சொல்லும் அளவுக்கு நீ சுத்தமாகக் கூட்ட வேண்டும்” என்று சொன்னவர் மார்ட்டின் லூதர் கிங்.

எதைச் செய்தாலும் அதை முழு நிறைவுடன் ( Perfection) செய்வது தான் படைப்பின் இரகசியம்..

நன்றி: ’விடை தேடும் வினாக்கள்’ - தமிழருவி மணியன்.

பக்:59.