
அப்போது நான் வெளிநாட்டின் பிரபல பல்கலைக் கழகம் ஒன்றின் வியாபார நிர்வாகம் கற்கும் மாணவன்.
என் கல்விக் காலத்தின் இறுதி வருடத்தில் ஒரு முறை என் பல்கலைக்கழக விரிவுரை மண்டபமொன்றில் வகுப்பின் இறுதியில் பதில் சொல்வதற்கான கேள்விக் கொத்தொன்று தரப் பட்டது.அதன் கடசிக் கேள்வி இந்த விரிவுரை மண்டபத்தைத் துப்பரவு செய்பவரின் பெயர் என்ன என்பதாகும்.
இது ஒரு பகிடிக்குரிய கேள்வியாகவே எனக்குத் தோன்றியது.நான் அந்தப் பெண்மணியைப் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.அவள் உயரமான கறுத்த தலை முடியைக் கொண்ட 50 களில் இருப்பவள்.ஆனால் எனக்கெப்படி அவளின் பெயர் தெரியும்?
அதனால் அந்தக் கடசிக் கேள்விக்கு விடையளிக்காமல் விடைத் தாளைப் பேராசிரியரிடம் கையளித்தேன்.இலேசான புன்னகையோடும் மிக மெல்லியதான அலட்சியத்தோடும் அந்தக் கேள்விக்கும் புள்ளிகள் உண்டா என கேட்டேன்.என்னுடய புன்னகையிலேயே என்னுடய விடையும் உறுதியாக ஒழிந்திருந்ததை பேராசிரியர் கண்டிருக்கக் கூடும்.
நிச்சயமாக! - சொன்னார் பேராசிரியர்.
உன்னுடய தொழில் வாழ்வில் நீ பலரைச் சந்திக்கக் கூடும்.ஆனால் உன்னோடு வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் முக்கியமானவரே!ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவரே!! என்பதை ஒரு போதும் மறக்காதே!அவர்களால் கட்டியெழுப்பப் பட்டிருக்கும் கோபுர உச்சியில் உன்னை அவர்கள் நிறுத்தி இருக்கிறார்கள்.
அவர்கள் உன் கவனத்துக்கு உரித்தாக வேண்டியவர்கள்!
உன் கவனிப்புக்கு உரித்தாக வேண்டியவர்கள்!
ஆக நீ செய்ய வேண்டியதெல்லாம் காணுகின்ற பொழுதுகளில் ஒரு புன்னகை.
மேலும்,பெயர் கூறி அழைத்து நலமா என்றொரு விசாரிப்பு.
இன்று நான் பெரு நிறுவனம் ஒன்றின் வெற்றி பெற்ற நிர்வாகி.வெற்றிக்கான அந்த அடிப்படைப் பாடத்தை நான் இங்கிருந்து தான் பெற்றுக் கொண்டேன்.
மின் தபாலில் வந்த ஒரு குறிப்பு.
நன்றி பிரதீப்.