Thursday, September 2, 2010

ஒரு திரைக் காட்சி

மகா கவி காளிதாஸ் என்ற 1955ம் ஆண்டு வெளிவந்த திரைப் படத்திலிருந்து ஒரு காட்சி;கதை வசனம் கே. வி. மகா தேவன்.

இளவரசியைத் திருமணம் செய்ய ஒரு போட்டி நடக்கிறது. அது அறிவுப் போட்டி. அறிவால் மகளை வெல்பவருக்கே தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாக அரசன் அறிவித்து விட்டான்.

அரசு,ஆட்சி, செல்வம் இவை அனைத்தும் நிலையற்றவை.அறிவும் கல்வியும் தான் நிலையானவை என்பதை அறிந்தவன் அரசன்.அதனால்,கல்வியறிவும் கலையுணர்வும் கொண்ட மணாளனுக்கான போட்டி நடை பெறுகிறது.வினாக்களும் விடைகளும் கீழே!




1.கல்வி எது? அறிவு எது? இவ் இரண்டில் சிறந்தது எது?
கற்பது மட்டுமே கல்வி.கற்றதனாலும் மற்றதினாலும் அறிவது அறிவு.ஆகையினால் கல்வியிலும் அறிவே சாலச் சிறந்தது.

2.வாழ்வோருக்குத் துணை எது?
நம்பிக்கை.

3.வழி நடப்போர்க்குத் துணை?
தைரியம்.

4.அழியாப் புகழ் பெறுவது?
தியாகம்.

5.அன்றாடம் தண்டிப்பது?
மனசாட்சி.

6.மனிதரை உயிரோடு தின்பது?
கவலை.

7.உலகின் மிகப் பெரும் அதிசயம்?
உலகில் தினம் சாகும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் தனக்கென்று பொருள் சேர்க்கும் மனித குணம்.

8.இன்ப துன்பங்களை அனுபவிப்பது உயிரா? உடலா?
உடலையும் உயிரையும் பிணைத்து நிற்கும் உணர்வு.

9.அழியும் உடலுக்கு இன்னல் நேரும் போது அழிவற்ற ஆண்மாவும் அல்லல் படுவது ஏன்?
கூட்டைச் சிதைக்கும் போது குருவியும் கதறுவதைப் போலத்தான்.

10.உயிர்கள் எங்கிருந்து வருகின்றன? எங்கு போய் முடிகின்றன?
பராமாத்மாவிடமிருந்தே உயிர்கள் பிரிந்து வருகின்றன.மீண்டும் பரமாத்மாவிடமே போய் இணைகின்றன.

11.அப்படியானால் உயிர்கள் இடத்திலே குண வேற்றுமைகள் இருப்பது ஏன்?
ஒரே கடலின் நீரானாலும் கொதிக்கின்ற பாத்திரத்திலே வைத்த நீர் கொதிக்கும். குளிர்ந்த பாண்டத்திலே வைத்த நீர் குளிர்ந்திருக்கும்.அவ்வாறே அந்தந்த ஆத்மாக்களின் உடலங்களுக்கேற்பவே குண பேதங்களும் அமையும்.

12.உயிர்களுக்கு முன் பிறவி இருந்ததை உணர்த்த ஏதேனும் ஆதாரம் காட்ட முடியுமா?
உலகிலே புதிதாகப் பிறக்கும் உயிர், பசியை உணர்ந்து அழுகிறது.பால் அருந்தினால் பசி தீரும் என்பதையும் அறிந்திருக்கிறது.இதனால் பால் உண்ணத் தாயைத் தேடித் தானாக நகர்கிறது.இவை எல்லாம் அந்தப் புத்தம் புது உயிருக்கு இந்த உலகத்திடம் முன் அனுபவம் இருந்ததற்கு ஆதாரம் என்று கூறலாம் அல்லவா?

நன்றி; 'மகாகவி காளிதாஸ்' திரைப்படம்.

2 comments:

நிலாமகள் said...

பார்த்திருக்கிறேன்... தொலைக்காட்சியில். பயனுள்ள பதிவு.

யசோதா.பத்மநாதன் said...

மிகவும் மகிழ்ச்சி சகோதரி. உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும்.

அனைத்தையும் மினைக்கெட்டு படித்து அன்போடு பின்னூட்டமிட்டமைக்கும்:)

மகிழ்ச்சியாக இருக்கிறது.தொடர்ந்து வாங்கோ.