Friday, February 13, 2015

பண்பு நலம்



ஒவ்வொருவரையும் இன் முகத்தோடு அனுகுங்கள். - அவர்கள் முரடர்களாக இருந்த போதிலும்.
காரணம் அவர்கள் பண்பானவர்கள் என்பதால் அல்ல. மாறாக, நீங்கள் பண்பானவர் என்பதால்.

Saturday, February 7, 2015

காலத்தை வெல்லும் நிஜம்



முல்லா வாழ்ந்து வந்த தேசத்தின் மன்னருக்கு ஒரு கண் மட்டும் பார்வை தெரியும். ஒரு கை மணிக்கட்டும் அவருக்குக் கிடையாது. ஒரு காலும் முடமானவர். இருந்தும், சாமர்கண்ட் நகரத்தில் மயக்கும் அரண்மனைகளையும்; விண்ணை முட்டும் மாட மாளிகைகளையும்; அழகு மிகு கனவுத் தோட்டங்களையும்; ஆடம்பரமான வாசஸ்தலங்களையும் அம் மன்னர் ஸ்தாபித்தார்.

அம் மன்னருக்கு வரும் தலைமுறையினர் எல்லோரும் தான் யாரென்று தெரிந்து கொள்வதற்கு தனது சித்திரம் ஒன்றைத் தீட்டி வைக்க வேண்டுமென்ற தணியாத தாகம் இருந்தது.

காலத்தை வென்று தனது பிரதாபங்களை உலகத்துக்குத் தெரிவிக்கும் சித்திரம் ஒன்றை விட்டுச் செல்லவேண்டும் என்ற எண்ணம் மன்னனின் மனதை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது.

அதற்காகச் சீன தேசத்தில் இருந்து ஓவியர் வரவழைக்கப்பட்டார். அவ் ஓவியர் முப்பது நாட்கள் அரும் பாடுபட்டு தனது திறமை எல்லாம் ஒன்றுகூட்டி மன்னரின் அச்சு அசலான பிம்பத்தைத் திரைச்சீலையில் வரைந்திருந்தார்.

மன்னரே உயிருடன் திரைச்சீலையில் இருந்து நம்மைப் பார்க்கிறாரோ என்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவாறு அமைந்திருந்தது அவ் ஓவியம்.

முப்பத்து ஓராம் நாள் திரை விலக்கப்பட்டது.

மன்னர் அச் சித்திரத்தை உற்றுப் பார்த்தார்.

’படம் நிஜமாய் இருக்கிறது; ஆனால் அவலட்சணமாய் இருக்கிறது. அந்தப் புழுவை வெளியே தூக்கிப் போட்டு அவன் தலையைக் கொய்து நான் காலூன்றுவதற்கு திரும்ப எடுத்து வாருங்கள்’ என்றார் அரசர்.

அடுத்த ஓவியர் வரவழைக்கப்பட்டார்.

அவரும் கடும் முயற்சியுடன் படம் வரைந்து நடுங்கும் கரங்களுடன் அதை அரசர் முன் சமர்ப்பித்தார்.

அரசர் அச் சித்திரத்தை வியப்புடன் சற்று நேரம் பார்த்திருந்து விட்டு பின்னர் தனது தீர்மானத்தைச் சொன்னார்.

‘இந்தப் பிம்பம் அழகாய் இருக்கிறது. ஆனால் நிஜமாய் இல்லை. வெளியே அவனைச் சிரச்சேதம் செய்து தலையை அவன் காலடியில் போடுங்கள் ‘

மூன்றாவது முறை யாரும் தைரியமாக படம் வரைய முன் வரவில்லை.

வழக்கம் போல முல்லா அரசவைக்கு அழைக்கப்பட்டார். வாளுக்கு இரையாகப்போகிறாரா அல்லது தூரிகையைத் தொடப்போகிறாரா, இதில் இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு முல்லாவுக்கு ஆணை இடப்பட்டது.

முல்லா தூரிகையைத் தேர்ந்தெடுத்தார். வெளியே பெயர் தெரியாத சில சித்திரக்காரர்களை கூலிக்கு அமர்த்தி அவர்களின் உதவியுடன் படத்தை வரைந்து முடித்துக் கொண்டார் முல்லா.

படத்திறப்பு விழாவை மேலும் தாமதப்படுத்த முடியாத கட்டம் நெருங்கியது.

அரசர் தன் கரங்களால் படச் சீலையை விலக்கினார்.

அரசர் ஓவியத்தைப் பார்த்தார். பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார். புருவத்தை இறுக்கினார். தலையைச் சொறிந்தார். அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். வானத்தைப் பார்த்தார். நீண்ட நேரம் ஜூக்காவைப் புகைத்தார். பின் ராஜகளை பொருந்திய தனது முகத்தில் புன்னகையைப் படரவிட்டார்.

’ரொம்ப மோசமில்லை. நான் அழகாய் தோன்றவில்லை. ஆனாலும் தூரத்தில் இருந்து பார்க்கும் போது நான் முடமென்று யார் கவனித்துச் சொல்லி விட முடியும்?’

நான் அம்பெய்தும் காட்சியை இக் கோணத்தில் இருந்து பார்க்கும் போது எனக்கு ஒருகண் பார்வை மட்டும் இருப்பதையோ அல்லது என் மணிக்கட்டு ஊனத்தையோ யாரும் கவனிக்க முடியாது.

இந்த வேடிக்கையான ஓவியக்காரரை தங்கக் காசுகளால் குளிப்பாட்டுங்கள்.

’அவருக்கு நிஜத்தை மக்களுக்கு எப்படிக்காட்ட வேண்டுமென்று தெரிந்திருக்கிறது’ என்று சந்தோஷமாகக் கூத்தாடினார் அரசர்.

நன்றி: ‘என்றார் முல்லா’முல்லா நஸ்ருதீன் கதைகள்; மொழிபெயர்ப்பு; சஃபி; டிசம்பர் 2009, உயிர்மை பதிப்பகம்; பக் 191 - 192.