Sunday, December 13, 2015

பேசுதல்கள்.....




”நூல்கள் மனதோடும் நண்பர்கள் இதயத்தோடும் இறைவன் ஆண்மாவோடும் மற்றவர்கள் செவியுடனும் பேசுகிறார்கள்”.
                                                          -என்.கணேசன் தொகுப்பில் இருந்து-

Tuesday, October 13, 2015

இஸ்லாத்தின் சிந்தனை....

சமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள்
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்


  நமது நாடு பல நூற்றாண்டுகளாகவே பல சமயத்தவர், இனத்தவர், மொழியினர், பண்பாட்டு மரபினர் வாழும் பன்மைச் சமூக நாடாக திகழ்ந்து வருகிறது. பன்மைச் சமூகச் சூழலில் இணக்கம் இருந்தால் மட்டுமே அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். நல்லிணக்கமே நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் வலுவான அடித்தளமாகும்.

  சமூக நல்லிணக்கம் மலர, வெற்று வார்த்தைகளும், போலிப் பேச்சுகளும், கண் துடைப்பு நடவடிக்கைகளும் எவ்வகையிலும் உதவ மாட்டா. மனித நேயம், நீதி, நியாயம், தர்மம், அஹிம்சை ஆகியவற்றின் கொள்கைகளும், செயல்பாடுகளுமே சமூக நல்லிணக்கம் உருவாக வழி வகுக்கும்.





 1.மனித நேயத்துடன் வாழ்க !

  சமூக நல்லிணக்கத்திற்குத் தடையாக இருப்பது கொள்கை வேறுபாடுகள் அல்ல. சமூகங்களுக்கிடையில் காணப்படும் ஆதிக்க மனப்பான்மை, வெறுப்பு, பகைமை, மாச்சரியம், பொறாமை, அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியவையாகும். இவற்றைப் போக்கும் அருமருந்து மனிதநேயமே. மொழியால், இனத்தால், சமயத்தால் வேறுபட்டிருப்பினும் நாம் அனைவரும் மனிதர்கள். ஒரே வகையான உடலமைப்பு, உடல் செயல்பாட்டு முறை, உளவியல் போக்கு கொண்டவர்கள். நமது தேவைகளும், உணர்வுகளும், ஆசைகளும், நிராசைகளும் ஒரே மாதிரியானவை. எனவே, தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்புவோம் என்று எண்ணிச் செயல்பட்டாலே நல்லிணக்கம் நம்மைத் தேடிவரும்.

  ஒன்றே குலம், ஒருவனே தேவன் – திருமூலர்
  யாதும் ஊரே, யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றன்
  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – வள்ளுவம்

  மனிதர்கள் அனைவரும் ஒரே குலத்தில் இருந்து பிறந்தவர்கள் ஒரு தாய் தந்தையரின் வழித்தோன்றல்கள் குர்ஆன் – பைபிள்

   உலகம் ஒரு குடும்பம் வசுதைவ குடும்பகம் என்ற கோட்பாடுகளைச் செயல்படுத்தினால் மனித நேயம் உருவாகும்.



2. உணர்வுகளை மதித்திடுக !

  ஒருவரது மொழியை, இனத்தை, சமயத்தை இழிவுபடுத்தும்போது, மோதல்கள் உருவாகி, இறுதியில் கலவரமாக வெடிக்கின்றது. வகுப்புவாதிகள் மக்களைப் பிளக்க வெறுப்பு விதைகள் விதைப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பிற சமயங்களை, கொள்கைகளை, சித்தாந்தங்களை மறுக்கலாம். ஆனால், உணர்வுகளை மதிக்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களை கண்ணியமாக, மனத்தைப் புண்படுத்தாமல் விமர்சிக்கலாம். ஆனால், இழிவு படுத்தக்கூடாது.


  (முஸ்லிம்களே !) அவர்கள் ஏக இறைவனை விடுத்து யாரை அழைத்து பிரார்த்தனை புரிகின்றார்களோ அவர்களை ஏசாதீர்கள்   (குர்ஆன் 6-108)


  பிற மதங்களைத் திட்டுவதும், விளைவுகளைப் பற்றி அக்கறை இன்றி அறிவிப்புகளை வெளியிடுவதும், பொய் பேசுவதும், அப்பாவி மக்களைக் கொல்வதும், கோயில்களையும், பள்ளிவாசல்களையும் களங்கப்படுத்துவதும் இறைவனை மறுப்பதாகும். - காந்தியடிகள்.


3. வேற்றுமையில் ஒற்றுமை காண்க !


  ஒரு நாட்டில் பல்வேறு மதங்களும், பண்பாடுகளும், மொழிகளும் இருப்பது தவிர்க்க முடியாதது. ஒரு மதத்திற்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் உருவாவதும் தவிர்க்க முடியாதது. இப்படி இருக்கையில் ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்பது ஒற்றுமைக்கல்ல, வேற்றுமைக்கே இட்டுச் செல்லும். பிறரது உரிமைகளைப் பறிக்காத வகையில் ஒவ்வொரு பிரிவினரும் தமது சமயத்தை, பண்பாட்டைப் பின்பற்றி நடப்பதால் எவருக்கும் கேடில்லை.

  நமக்குத் தேவை ஒருமைப்பாடே தவிர பிற கலாச்சாரங்களை அழித்து ஒரே மாதிரியாக இருப்பது அல்ல.

 ஒற்றுமை வேறு

 ஒரே மாதிரியாக இருப்பது வேறு

  (இஸ்லாத்தை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ, நிர்பந்தமோ இல்லை (குர்ஆன் 2 : 256) என்ற இறைவசனம் கருத்துத் திணிப்பை வன்மையாக எதிர்க்கின்றது.


4. சம உரிமைகளையும், வாய்ப்புகளையும் வழங்குக !

  எவ்வித பேதமுமின்றி குடிமக்கள் அனைவரின் உயிர், உடைமை, கண்ணியம், நம்பிக்கை ஆகியவற்றிற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் பொருளியல் தளங்களில் அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்க வேண்டும். ஒரு சமூகத்திற்கு ஒரு நீதி என்ற கொள்கையின் அடிப்படையில், உரிமைகளும், வாய்ப்புகளும் மறுக்கப்படும்போது பொறாமையும், வெறுப்பும், துவேஷமும் உருவாகி நல்லிணக்கம் குலைய நேரிடும். நீதி செலுத்துங்கள். எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக்கூடாது.    (குர்ஆன் 5-8) என்ற இறைவசனம் பகைமை கொண்டுள்ள சமுதாயத்திற்கும் நீதி செலுத்திட வேண்டும் என்று பணிக்கின்றது.


5. எல்லோரும் நல்லவரே என்று எண்ணுக

  எல்லா சமயத்தவரிலும், இனத்தவரிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு என்று சாதாரண உண்மையை மறந்து நமது சமுதாயத்தவர் மட்டும் நல்லவர், பிற சமுதாயத்தவர் மோசமானவர் என்று எண்ணுவது விபரீதமான சிந்தனையாகும். நமது சமுதாயத்தவர்கள் நேர்மையானவர்கள், வீரர்கள், தேச பக்தர்கள், சகிப்புத்தன்மை உடையவர்கள், அறிவு மிக்கவர்கள், மென்மையானவர்கள் மற்ற சமுதாயத்தவர்கள் இதற்கு நேர் மாறானவர்கள் என்று எண்ணுவது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, வெறுப்பையும், பகைமையும் விதைக்கும் தன்மை கொண்டது. வகுப்புவாதிகள் பகைமையை வளர்க்க ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தீய சக்தியாக உருவகப்படுத்திக் காண்பிப்பார்கள். உருப்படியான கொள்கை எதுவும் இல்லாததால் ஒரு பொது எதிரியை உருவாக்கித்தான் தமது இயக்கத்தை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.

  மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற உயரிய சிந்தனையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.
 கிறிஸ்தவத்தோடு இஸ்லாம் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், கிறிஸ்தவர்களின் சில செயல்களை விமர்சித்தாலும், கிறிஸ்தவர்களிடம் காணப்படும் நல்ல பண்புகளை இஸ்லாம் மதிக்கத் தவறவில்லை என்பதைப் பின்வரும் திருமறை வசனம் உணர்த்தும்.

  அவர்கள் (கிறிஸ்தவர்களுள்) வணக்கத்தில் திளைத்த அறிஞர்களும், துறவிகளும் இருக்கின்றனர், மேலும் அவர்கள் அகந்தை கொண்டவர்களாகவும் இல்லை – குர்ஆன் (5-82)

  நமது நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், கலை, இலக்கியம், பண்பாடு, விஞ்ஞானம், விளையாட்டு, கல்வி, மருத்துவம், சமூக சேவை ஆகிய எல்லாத் துறைகளிலும் எல்லா சமயத்தவரும், மாநில மக்களும் பங்களித்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளனர் என்பது உண்மைக்குப் புறம்பானதாகும். இந்தச் செய்திகளை இளம் தலைமுறையினரும் புரிந்து கொள்ளும் வகையில் பாடப் புத்தகங்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும்.



6. வரலாற்றைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்க

  மக்களைப் பிளவுபடுத்த வரலாறு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. வகுப்பு வாதம் வகுப்பறைகளில் பாடப் புத்தகங்கள் வாயிலாக உருவாக்கப்படுகிறது என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. நாட்டில் விடுதலைக்கு முன்னர் வெள்ளையர்கள் இந்து, முஸ்லிம்களைப் பிளக்க வரலாற்றைத் திரித்தும், புரட்டியும், இட்டுக் கட்டியும் எழுதி தமது ஆட்சிக் காலத்தை நீட்டித்துக் கொண்டனர்.

  அவர்கள் எழுதிச் சென்ற வரலாற்றுக் குறிப்புகளை இன்னமும் நாம் சரி செய்யாமல் இருப்பது, வகுப்பு துவேஷத்திற்கு உரம் ஊட்டுவதாக உள்ளது. இன்றைய வகுப்புவாதிகளும், வகுப்புவாதத்தை மேலும் வளர்க்க வரலாற்றையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்.

  வரலாற்றில் பல தவறுகள், அநீதிகள் நடந்துள்ளன என்பது உண்மை. அவற்றை மூடி மறைக்காமலும், மிகைப்படுத்தாமலும், திரிக்காமலும் சொல்ல வேண்டும்.

  நடுநிலையோடு ஆதாரப் பூர்வமாக எழுதப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். உள்நோக்கத்தோடும், ஒரு பக்கச் சார்போடும் எழுதப்பட்ட செய்திகளைப் புறக்கணிக்க வேண்டும்.


  வரலாற்றுக் குறிப்புகளில் உள்ள முரண்பாடுகளை அறிய வேண்டும். ஒரு முஸ்லிம் மன்னர் கோயிலை இடித்தார் என்று ஒரு குறிப்பு காணப்படுகிறது. அதே மன்னர் கோயில்களுக்கு மானியம் வழங்கினார் என்றும் ஆதாரப்பூர்வ ஆவணக் குறிப்புகள், கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. எனவே, இங்கு ஓர் உண்மை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்பது அம்பலமாகிறது.

  மன்னர்களுக்கிடையில் நடைபெற்ற சண்டைகள் மதங்களுக்கிடையில் நடைபெற்ற சண்டைகளாகவும், சமூகங்களுக்கிடையில் நடைபெற்ற சண்டைகளாகவும், சித்தரிக்கப்படுகின்றன. நாடு பிடிக்கும் ஆசையிலும், செல்வ வளங்களை சுருட்டிக் கொள்ளும் ஆசையிலும் மன்னர்களுக்கிடையில் போர்கள் நடைபெற்றன. இப்போர்கள் மதப்பிரச்சாரத்திற்காக நடைபெற்றவை அல்ல. முஸ்லிம் மன்னர்களின் படையில் தளபதிகளாகவும், சிப்பாய்களாகவும் இந்துக்கள் இருந்துள்ளனர். அதுபோலவே இந்து மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனர். முஸ்லிம் மன்னரும், இன்னொரு முஸ்லிம் மன்னரும் மோதிக்கொள்ளும் வேளையில் அவர்கள் இருவருக்கும் இந்து மன்னர்கள் உதவி உள்ளனர். எனவே இந்த மோதல்களுக்கு மதச்சாயம் பூசுவது உண்மைக்கும் புறம்பானதாகும்.


  வரலாற்றில் நிகழ்ந்துள்ள பிழைகளைச் சரிசெய்யப் புறப்பட்டால் வரலாற்றில் எந்த காலகட்டம் வரை செல்வது? எனவே, வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்று, அதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதே அறிவுடைமையாகும்.

  வரலாற்றில் என்றோ நடந்து விட்ட தவறுகளுக்கு இப்போது வாழும் மக்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தித் தண்டிப்பது நியாயமல்ல.

  வரலாற்று நிகழ்வுகளை இந்த நோக்கில் அணுகாவிடில் உலக முடிவு நாள் வரை நாட்டு மக்களுக்கு அமைதி கிட்டாது.


7. சமூக சேவை ஆற்றுக

  சமூக சேவை பகைமையையும் துவேஷத்தையும் அகற்றி மக்களை இணைக்கும் ஆற்றல் கொண்டது. எனவே, ஒவ்வொரு சமூகமும் சாதி, மதபேதமின்றி அனைவருக்கும் பலன் கிட்டும் வகையில் சமூக சேவைகளைச் செய்து வர வேண்டும். சமூக சேவை, சமூக சேவைக்காகவே செய்யப்பட வேண்டும். சமூக சேவையோடு, மதப் பிரச்சாரத்தையும், கொள்கைப் பிரச்சாரத்தையும் இணைப்பது நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும்.


  சமூக சேவை செய்வது போலவே, நாட்டின் வளர்ச்சிப் பணிகளிலும் எல்லா சமூகங்களும் பங்கேற்க வேண்டும். இப்பணிகளில் எல்லோரும் இணைந்து செயல்படும் போது சமூகங்களுக்கிடையே நெருக்கம் அதிகமாகும். இப்பணிகளில் எந்தச் சமூகத்தையும் ஒதுக்கவும் கூடாது எந்தச் சமூகமும் ஒதுங்கவும் கூடாது.


8. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்க


  நமது நாட்டில் பல்வேறு சமூகங்கள் நூற்றாண்டுகளாக அருகருகே வாழ்ந்து கொண்டிருந்தாலும், ஒரு சமூகத்தின் நம்பிக்கை, கோட்பாடு, வழிபாட்டு முறைகள், பண்பாடு, அச்சமூகத்தின் பிரச்சனைகள், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஆகியவை பற்றி மற்றொரு சமூகத்திற்குத் தெரியாது. அரசியல், பொருளியல், வாணிபம், தொழில், கல்வி, வேலை வாய்ப்புகள் ஆகிய எல்லாவற்றையும் பேசுவார்கள். ஆனால் சமூகம், சமயம் சார்ந்த விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள மாட்டார்கள்.

  இதன் விளைவாக சமூகங்களுக்கிடையில் பெருத்த இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளியைத்தான் வகுப்புவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பொய்யான செய்திகளை மக்களிடையே பரப்பி, வெறுப்புத் தீயை வேகமாக வளர்க்கின்றனர். எனவே, சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வை அதிகப்படுத்த பல்சயமப் பல் சமூக உரையாடல்களையும் அடிக்கடி நடத்த வேண்டும்.


9. அநீதிக்கெதிராக குரல் எழுப்புக

  மதவெறி, இனவெறி காரணமாக ஒரு சமூகத்தின் உரிமைகள் பறிக்கப்படும்போதும், அச்சமூகத்தினருக்கு அநீதிகள் இழைக்கப்படும் போதும் நாட்டின் எல்லா தரப்பு மக்களும் ஒரே குரலில் கண்டிக்க வேண்டும். அநீதி இழைப்பவர் நமது சமூகத்தவராயினும் விளைவுகளைக் கண்டு அஞ்சாமல் துணிந்து எதிர்க்க வேண்டும். தமது சமூகம் செய்யும் அநீதிகளுக்குத் துணை நிற்பதே இனவெறி என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

  வகுப்பு வெறியர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி அவர்களோடு எந்த அரசியல் உறவுகளும் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் ஆட்சிக் கட்டிலில் ஏறி விடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வகுப்புவாதிகள் ஆன்மீகப் போர்வையிலும் அரசியல் போர்வையிலும் மக்களை ஏமாற்றுகிறார்கள், ஆன்மீகம் வேறு, வகுப்புவாதம் வேறு என்பது மக்களுக்குத் தெளிவாக்கப்பட வேண்டும்.

  வகுப்பு மோதல்கள் நடைபெறும் வேளையில் மட்டும் எதிர்ப்பது, பின்னர் மெளனம் காப்பது என்ற நிலையை விடுத்து வகுப்புவாதத்திற்கு எதிராகத் தொடர்ந்து தொய்வின்றிக் குரல் எழுப்ப வேண்டும்.

  வகுப்பு மோதல்களுக்கான அறிகுறிகள் தென்படும் போது, அப்பகுதிகளுக்குச் சென்று மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.


10. நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்திடு

  நன்மையும், தீமையும் சமமாக மாட்டா, மிகச்சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பீராக, அப்போது கடும் பகை கொண்டவர்கள் கூட உற்ற நண்பர்களாகி விடுவதைக் காண்பீர் என்று கூறுகிறது திருக்குர்ஆன் (41-34,35)

  நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது.
  அது போலவே ஒரு தீமையை இன்னொரு தீமையின் வாயிலாகக் களைந்து விட முடியாது. வகுப்பு வாதத்தை இன்னொரு வகுப்பு வாதத்தால் ஒழிக்க முடியாது.
  வகுப்பு வாதிகள் துவேஷத்தை விதைத்தால் நாம் அன்பை விதைப்போம்.
  வகுப்பு வாதிகள் பொய்ச் செய்தியைப் பரப்பினால் நாம் உண்மையைச் சொல்வோம்.

  சமூக நல்லிணக்கம் மலர பத்து கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றைச் செம்மையாக வாய்மையாகச் செயல்படுத்தினால் மதவெறி, ஜாதி வெறி சாய்ந்து மனித நேயம் வளரும்.

( தினமணி – ஈகைப் பெருநாள் மலர் 2015 )

Saturday, September 19, 2015

வேளை வரும்



Sitting quietly,
doing nothing,
Spring comes,
and the grass grows by itself.
                                                     - Zenrin. Kushu -

Sunday, May 31, 2015

ஒழுக்கம்



ஒழுக்கம் என்பது சாட்சி இல்லா இடத்திலும் நேர்மையாய் இருப்பது.
சுத்தம் என்பது கண் காணா இடங்களையும் தூய்மையாய் வைத்திருப்பது.

“பாற்கடல்” நூலில் வைரமுத்து.

Wednesday, May 6, 2015

அறிவின் கூறு




தேவை இல்லாத அறிவு இரட்டிப்பு மடமை.

Monday, April 27, 2015

நம்பிக்கை



ஒன்றே எனின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்
 அன்றே எனின் அன்றேயாம், ஆமே எனின் ஆமேயாம்
 இன்றே எனின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்
 நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!

( கம்ப இராமாயணம்; யுத்த காண்டம்; கடவுள் வாழ்த்துப் பாடல்.)

 இறைவன் ஒன்று என்றால் ஒன்றுதான்; பல என்றால் பலவேதான்; அப்படி அல்ல என்றாலும் அல்லதான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை என்றால் இல்லைதான்; உண்டு என்றால் உண்டுதான்; எல்லாம் நமது நம்பிக்கையில்தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நலமுடயதாக ஆகி விடும்!

(தெய்வம் என்றால் அது தெய்வம் சிலை என்றால் வெறும் சிலைதான்; உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை என்றார் பின்னால் வந்த கண்ணதாசன்.)

கம்பனுக்கும் முன்பே நம்மாழ்வார் இப்படிக்கூறி இருக்கிறார்.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே

நம்பிக்கையே மனித வாழ்வு!

Think positive!

Friday, February 13, 2015

பண்பு நலம்



ஒவ்வொருவரையும் இன் முகத்தோடு அனுகுங்கள். - அவர்கள் முரடர்களாக இருந்த போதிலும்.
காரணம் அவர்கள் பண்பானவர்கள் என்பதால் அல்ல. மாறாக, நீங்கள் பண்பானவர் என்பதால்.

Saturday, February 7, 2015

காலத்தை வெல்லும் நிஜம்



முல்லா வாழ்ந்து வந்த தேசத்தின் மன்னருக்கு ஒரு கண் மட்டும் பார்வை தெரியும். ஒரு கை மணிக்கட்டும் அவருக்குக் கிடையாது. ஒரு காலும் முடமானவர். இருந்தும், சாமர்கண்ட் நகரத்தில் மயக்கும் அரண்மனைகளையும்; விண்ணை முட்டும் மாட மாளிகைகளையும்; அழகு மிகு கனவுத் தோட்டங்களையும்; ஆடம்பரமான வாசஸ்தலங்களையும் அம் மன்னர் ஸ்தாபித்தார்.

அம் மன்னருக்கு வரும் தலைமுறையினர் எல்லோரும் தான் யாரென்று தெரிந்து கொள்வதற்கு தனது சித்திரம் ஒன்றைத் தீட்டி வைக்க வேண்டுமென்ற தணியாத தாகம் இருந்தது.

காலத்தை வென்று தனது பிரதாபங்களை உலகத்துக்குத் தெரிவிக்கும் சித்திரம் ஒன்றை விட்டுச் செல்லவேண்டும் என்ற எண்ணம் மன்னனின் மனதை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது.

அதற்காகச் சீன தேசத்தில் இருந்து ஓவியர் வரவழைக்கப்பட்டார். அவ் ஓவியர் முப்பது நாட்கள் அரும் பாடுபட்டு தனது திறமை எல்லாம் ஒன்றுகூட்டி மன்னரின் அச்சு அசலான பிம்பத்தைத் திரைச்சீலையில் வரைந்திருந்தார்.

மன்னரே உயிருடன் திரைச்சீலையில் இருந்து நம்மைப் பார்க்கிறாரோ என்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவாறு அமைந்திருந்தது அவ் ஓவியம்.

முப்பத்து ஓராம் நாள் திரை விலக்கப்பட்டது.

மன்னர் அச் சித்திரத்தை உற்றுப் பார்த்தார்.

’படம் நிஜமாய் இருக்கிறது; ஆனால் அவலட்சணமாய் இருக்கிறது. அந்தப் புழுவை வெளியே தூக்கிப் போட்டு அவன் தலையைக் கொய்து நான் காலூன்றுவதற்கு திரும்ப எடுத்து வாருங்கள்’ என்றார் அரசர்.

அடுத்த ஓவியர் வரவழைக்கப்பட்டார்.

அவரும் கடும் முயற்சியுடன் படம் வரைந்து நடுங்கும் கரங்களுடன் அதை அரசர் முன் சமர்ப்பித்தார்.

அரசர் அச் சித்திரத்தை வியப்புடன் சற்று நேரம் பார்த்திருந்து விட்டு பின்னர் தனது தீர்மானத்தைச் சொன்னார்.

‘இந்தப் பிம்பம் அழகாய் இருக்கிறது. ஆனால் நிஜமாய் இல்லை. வெளியே அவனைச் சிரச்சேதம் செய்து தலையை அவன் காலடியில் போடுங்கள் ‘

மூன்றாவது முறை யாரும் தைரியமாக படம் வரைய முன் வரவில்லை.

வழக்கம் போல முல்லா அரசவைக்கு அழைக்கப்பட்டார். வாளுக்கு இரையாகப்போகிறாரா அல்லது தூரிகையைத் தொடப்போகிறாரா, இதில் இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு முல்லாவுக்கு ஆணை இடப்பட்டது.

முல்லா தூரிகையைத் தேர்ந்தெடுத்தார். வெளியே பெயர் தெரியாத சில சித்திரக்காரர்களை கூலிக்கு அமர்த்தி அவர்களின் உதவியுடன் படத்தை வரைந்து முடித்துக் கொண்டார் முல்லா.

படத்திறப்பு விழாவை மேலும் தாமதப்படுத்த முடியாத கட்டம் நெருங்கியது.

அரசர் தன் கரங்களால் படச் சீலையை விலக்கினார்.

அரசர் ஓவியத்தைப் பார்த்தார். பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார். புருவத்தை இறுக்கினார். தலையைச் சொறிந்தார். அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். வானத்தைப் பார்த்தார். நீண்ட நேரம் ஜூக்காவைப் புகைத்தார். பின் ராஜகளை பொருந்திய தனது முகத்தில் புன்னகையைப் படரவிட்டார்.

’ரொம்ப மோசமில்லை. நான் அழகாய் தோன்றவில்லை. ஆனாலும் தூரத்தில் இருந்து பார்க்கும் போது நான் முடமென்று யார் கவனித்துச் சொல்லி விட முடியும்?’

நான் அம்பெய்தும் காட்சியை இக் கோணத்தில் இருந்து பார்க்கும் போது எனக்கு ஒருகண் பார்வை மட்டும் இருப்பதையோ அல்லது என் மணிக்கட்டு ஊனத்தையோ யாரும் கவனிக்க முடியாது.

இந்த வேடிக்கையான ஓவியக்காரரை தங்கக் காசுகளால் குளிப்பாட்டுங்கள்.

’அவருக்கு நிஜத்தை மக்களுக்கு எப்படிக்காட்ட வேண்டுமென்று தெரிந்திருக்கிறது’ என்று சந்தோஷமாகக் கூத்தாடினார் அரசர்.

நன்றி: ‘என்றார் முல்லா’முல்லா நஸ்ருதீன் கதைகள்; மொழிபெயர்ப்பு; சஃபி; டிசம்பர் 2009, உயிர்மை பதிப்பகம்; பக் 191 - 192.





Thursday, January 22, 2015