Sunday, May 20, 2012

மனப் பக்குவம்



ஒரு பெண் ஜென் ( ZEN) ஞானி தன் பயணத்தில் ஒரு நாள் இரவு ஒரு கிராமத்தில் தங்க நேர்ந்தது. அந்த ஊர் காரர்களுக்கு ஜென் கொள்கைக் காரர்களைக் கண்டால் பிடிக்காது. அந்தப் பெண் துறவியும் ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி தங்க இடம் கேட்டார். யாரும் அவருக்கு இடம் கொடுக்கவில்லை. அதனால் அவர் கிராமத்தின் வெளிப்புறத்தில் ஒரு பழ மரத்தடியில் தங்க நேர்ந்தது.

கடுமையான குளிர். காட்டு விலங்குகள் கத்திக் கொண்டிருந்தன. களைப்பின் மிகுதியினால் கண்ணயர்ந்து உறங்கி விட்டார். நள்ளிரவுப் பொழுதில் கடும் குளிரின் காரணமாக அவருக்கு விழிப்பு வந்து விட்டது.

வானத்தைப் பார்த்தார். அங்கு முழு நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் அதற்குக் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. மரத்தில் இருந்து வாசனை மிகுந்த மலர்கள் யாருக்கும் நோகாமல் உதிர்ந்து கொண்டிருந்தன. வயல் வெளியைத் திரும்பிப்பார்த்தார். வயலில் நாற்றுக்கள் நிலவொளியின் மெல்லிய பிரகாசத்தில் காற்றுக்கு தலையசைத்துக் கொண்டிருந்தன. அந்த இரவு நேரத்துக் கிராமம் இயற்கையின் இனிய இசையைப் போல ரம்மியமானதாய் இருந்தது. இந்த மனோரம்மியமான காட்சியைக் கண்டு மிகப் புளகாங்கிதம் அடைந்தார் அந்தத் துறவி.

மறுநாட் காலை அக் கிராமத்தாருக்கு தன் நன்றியறிதலை அவர் தெரிவித்தார். காரணம் கேட்டதற்கு, “ உங்களில் யாரேனும் எனக்குத் தங்குவதற்கு இடமளித்திருந்தால் நேற்று இரவு இயற்கையின் அழகை அள்ளிப் பருகி இருக்க மாட்டேன். தங்க நிலவினைக் காணவும்; மலர்களின் மணத்தை உணரவும்; மூடுபனியை ரசிக்கவும்; வயல் நாற்றுக்களின் நாட்டியத்தைக் காணவும் தவறியிருப்பேன்.” என்றார்.

உண்மை தானே! எல்லாவற்றிலும் நன்மை இருக்கிறது. எல்லா சூழ்நிலையிலும் அதனைக் கண்டுகொள்ளும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியதொன்று தான் நாம் செய்ய வேண்டியது.


5 comments:

இராஜராஜேஸ்வரி said...

மரத்தில் இருந்து வாசனை மிகுந்த மலர்கள் யாருக்கும் நோகாமல் உதிர்ந்து கொண்டிருந்தன.

அருமையான மனப் பக்குவம்..
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

நிலாமகள் said...

எல்லாவற்றிலும் நன்மை இருக்கிறது. எல்லா சூழ்நிலையிலும் அதனைக் கண்டுகொள்ளும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியதொன்று தான் நாம் செய்ய வேண்டியது.

ஆம் தோழி!

யசோதா.பத்மநாதன் said...

நன்றி தோழிகளே!

பரிவோடு வந்து பகிர்ந்து கொள்ளும் உங்கள் வார்த்தைகளுக்கு!

www.eraaedwin.com said...

ஜென் என்றால் ஜென்தான்

யசோதா.பத்மநாதன் said...

அதே! அதே! :)