Sunday, May 6, 2012

தன்னை அறியும் விஞ்ஞானம் - 1 -




தன்னைக் கண்டறிதல்:-

( நீ யார்? நீ உனது உடலா? அல்லது உன் மனமா? அல்லது அதை விட உயர்ந்த ஒன்றா? நீ யார் என்பது உனக்குத் தெரியுமா? அல்லது தெரிந்ததாக எண்ணிக் கொள்கிறாயா? இதெல்லாம் அவசியமா? பொருள் நலம் கருதும் நமது சமுதாயத்தில், உண்மையான அறிவு பெறாத தலைமையின் கீழ் நம் உண்மையான உயர் நிலையை உணர முற்படுவது அனேகமாகத் தடை செய்யப் பட்டுள்ளது. மாறாக, நமது பொன்னான நேரத்தை நம் உடலுக்கு முக்கியத்துவம் தந்து அதைப் பேணுவதிலும் சீராட்டுவதிலும் செலவளிக்கின்றோம். இதற்கு மாற்றாக ஏதேனும் இருக்கக் கூடுமா? )

மிக முக்கியமான இந்தக் கிருஷ்ன உணர்வு இயக்கம் மனித சமுதாயத்தை ஆன்மீக மரணத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக ஏற்பட்டுள்ளது. தற்போதய மனித சமுதாயம் குருடர்களான தலைவர்களால் தவறாக வழிநடத்திச் செல்லப் படுகிறது. ஏனெனில், வாழ்வின் நோக்கமும் குறிக்கோளும் தன்னுணர்வு பெற்று, தற்போது நாம் இழந்துள்ள முழுமுதற் கடவுளுடனான நம் உறவை மீண்டும் ஏற்படுத்துவது என்பதை அவர்கள் அறியாதவர்கள். இந்த முக்கியமான விஷயத்தில் மக்களை நல்லறிவு பெறச் செய்ய கிருஷ்ன உணர்வியக்கம் முயற்சித்து வருகிறது.

வேத நாகரிகத்தின் படி, கிருஷ்னரோடான, அதாவது கடவுளுடனான நம் உறவை உணர்வது வாழ்வின் பரி பக்குவ நிலை. பரமான விஞ்ஞானத்தில் வல்லுனர்களான எல்லாராலும் வேத அறிவிற்கெல்லாம் அடிப்படையானதென்று ஒப்புக் கொள்ளப்படும் பகவத் கீதையில் இருந்து மனிதர்கள் மட்டுமன்றி எல்லா உயிர் வாழிகளும் இறைவனின் இணைபிரியா அங்கங்கள் என்பது நமக்குத் தெரிய வருகிறது. அங்கங்கள் முழுமைக்குச் சேவை செய்வதற்காக ஏற்பட்டவை. கால்கள், கைகள், விரல்கள், காதுகள் எல்லாம் உடல் முழுமைக்கும் சேவை செய்வதற்காக ஏற்பட்டவை. உயிர்வாழிகளான நாம் இறைவனின் இணைபிரியா அங்கங்களாகையால் அவருக்குச் சேவை செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நமது உண்மை நிலை என்னவென்றால், நாம் எப்போதும் யாருக்காவது - குடும்பம், நாடு, சமூகம் என்று யாருக்காவது சேவை செய்து கொண்டிருக்கிறோம். நமது சேவையைப் பெறுவதற்கு யாரும் இல்லாது விடில், ஒரு நாயையோ பூனையையோ வளர்த்துக் கொண்டு அதற்குச் சேவை செய்கிறோம். இதெல்லாம் நம் அமைப்பின் இயல்பில், நாம் பிறருக்குச் சேவை செய்வதற்காக ஏற்பட்டவர்கள் என்பதை நிரூபிக்கிறது. என்றாலும் நம் திறமை முழுவதையும் பயன்படுத்திச் சேவை செய்யும் போதும் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. நம் சேவையைப் பெறுபவர்களும் திருப்தி அடைவதில்லை. பெளதீகத் தளத்தில் எல்லோரும் திருப்தியற்றவர்களாகவே காணப்படுகிறோம். நம் சேவை சரியான இலக்கை நோக்கிச் செலுத்தப்படவில்லை என்பதே இதற்குக் காரணம். உதாரணமாக, ஒரு மரத்திற்குச் சேவை செய்ய விரும்பினால். அதன் வேருக்கு நீரூற்ற வேண்டும். அதன் இலைகள், கிளைகள், கொப்புகள் ஆகியவற்றின் மேல் தண்ணீரைக் கொட்டினால் பயன் ஏற்படுவதில்லை.முழுமுதற்கடவுளுக்குச் சேவை செய்தால், மற்ற அங்கங்கள் எல்லாம் தானாகவே திருப்தி பெறும். ஆகவே, எல்லா நலவாழ்வுத் திட்டங்களும்,சமூகம் குடும்பம், நாடு,ஆகியவற்றுக்கான சேவைகளும் புருஷோத்தமனான முழுமுதற்கடவுளுக்குச் சேவை செய்வதன் மூலம் தாமாகவே நிறைவேற்றப்படுகின்றன.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கடவுளைப் பொறுத்த மட்டில் தன் உண்மையான ஆதார நிலை என்னவென்பதை உணர்ந்து,அதன் படி நடக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இது சாத்தியமானால் நம் வாழ்வு வெற்றியுள்ளதாக அமையும். ஆனால், சில வேளைகளில், ‘கடவுள் இல்லை’, ’நானே கடவுள்’,”நான் கடவுளைப்பற்றிக் கவலைப்படவில்லை” என்றெல்லாம் சவால் விடுகின்றோம். உண்மையில் இப்படிச் சவால் விடுவதெல்லாம் நம்மைக் காப்பாற்றாது. கடவுள் இருக்கவே செய்கிறார். அவரை நாம் ஒவ்வொரு கணமும் காணலாம். நம் வாழ்வில் நாம் கடவுளைக் காண மறுத்தால், அவர் கொடிய மரணமாக நம் கண்முன் தோன்றுவார். நாம் ஒரு அம்சத்தில் அவரைக் காணாது விட்டால் வேறொரு அம்சத்தில் அவரைக் காண்போம். முழுமுதற் கடவுளின் பல அம்சங்கள் உள்ளன. ஏனெனில் பிரபஞ்சத் தோற்றம் முழுமைக்கும் மூலவேர் அவரே. ஒரு வகையில் அவரிடம் இருந்து நாம் தப்ப முடியாது.

இந்த கிருஷ்ன உணர்வு இயக்கம் கண்மூடித்தனமான மத வெறியோ, யாரோ சமீபத்தில் தோன்றிய ஒருவனின் புரட்சியோ அல்ல. இது உண்மையில் உன்னத அனுபவிப்பாளரான முழுமுதற்கடவுளோடு நமக்கேற்பட்டுள்ள தவிர்க்க முடியாத உறவை விஞ்ஞான ரீதியாக, அதிகாரபூர்வமாக அணுகும் செயல் முறையாகும். அவருடனான நம் நித்திய உறவையும் அதனால் நாம் அவருக்கு ஆற்ற வேண்டியுள்ள கடமைகளைச் செய்யும் முறையையும் பற்றிக் கிருஷ்ன உணர்வு இயக்கம் பேசுகிறது. இவ்வாறாக, நாம் இந்த மனித வடிவிலான வாழ்வில் பெறத்தக்க மிக உயர்ந்த பக்குவ நிலையை அடைவதற்கு கிருஷ்ன உணர்வு இயக்கம் நமக்கு உதவுகிறது.

சில பிரத்தியேக அம்சங்களைக் கொண்ட இந்த மனிதப் பிறவி, லட்சக்கணக்கான ஆண்டுகளாக ஆத்மா பரிநாமச் சுளர்ச்சியில் ஈடுபட்டதன் பின் ஏற்பட்டதொன்று என்பதை நாம் எப்போதும் நினைவிற் கொள்ள வேண்டும். மனிதப் பிறவியை அடைந்தவன் தன் பொருளாதார மற்றும் வாழ்வுப் பிரச்சினைகளைக் கீழ் நிலை உயிரினங்களை விட மிக எளிதாகத் தீர்த்துக் கொள்கிறான். பன்றி, நாய், ஒட்டகம்,கழுதை போன்றவற்றிற்கும் நம்மைப் போலவே முக்கியமான வாழ்வுப் பிரச்சினைகள் உண்டு; அவற்றை அவை கீழ்தரமான பண்பற்ற முறையில் தீர்த்துக் கொள்கின்றன. ஆனால் பண்போடு வசதியாக வாழ்வதற்குத் தேவையான எல்லாத் திறமைகளையும் மனிதனுக்கு இயற்கை வழங்கியுள்ளது.

பன்றிகளையும் மற்ற மிருகங்களையும் விடச் சிறப்பாக வாழக்கூடிய தகுதி மனிதனுக்கு மட்டும் ஏன் வழங்கப்பட்டுள்ளது? உயர் பதவியிலுள்ள அதிகாரிக்கு சாதாரண குமாஸ்தாவை விட ஏன் அதிகமான வாழ்க்கை வசதிகள் தரப்பட்டுள்ளன? இதற்கு மிக எளிதில் விடை கூறலாம். உயர் நிலையில் உள்ள அதிகாரி சாதாரண குமாஸ்தாவை விட அதிகமான பொறுப்புள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டியவராய் இருக்கிறார்.
அது போலவே, எப்போதும் வயிற்றுப் பசிக்காக இரை தேடுவதிலேயே கருத்தைச் செலுத்தும் மிருகங்களை விட மனிதன் மிக உயர்ந்த கடமைகளை நிறைவேற்ற வேண்டியவனாய் இருக்கிறான். ஆனால் இன்றய நாகரிகம் மிருக வாழ்வின் தரத்தை ஒட்டியதாய் இருப்பதால் இயற்கையின் விதிகளின் படி , வயிற்றை நிரப்பும் பிரச்சினை மேலும் தீவிரமாகியுள்ளது.இந்த மெருகேற்றப்பட்ட மிருகங்களிடையே ஆன்மீக வாழ்வை அறிவுறுத்த நாம் முயற்சிக்கும் போது , அவை தம் வயிற்றைத் திருப்திப் படுத்துவதற்காக உழைப்பதே தமக்கு முக்கியமென்றும் ஆன்மீக நிலை பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் தமக்கில்லை என்றும் கூறுகின்றன. கடினமாக உழைக்க அவை ஆவலாக இருந்தாலும் இயற்கை விதிகளின் காரணத்தால் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல தடைகளை அவை எதிர் நோக்க நேரிடுகிறது. என்றாலும் கூட, ஆன்மீக நிலையை , இறை நிலையை, அவை நிராகரிக்கின்றன.

இந்த மனித வாழ்வு உயர் நிலையை, உயர்ந்த பக்குவத்தை, எய்துவதற்காக நமக்குத் தரப்பட்டுள்ளது.பன்றிகளையும் நாய்களையும் போல கடினமாக உழைப்பதற்காக அல்ல. அந்த உயர் பக்குவ நிலை நமக்கு வேண்டாமென்றால் அப்போது நாம் கடினமாக உழைத்தே ஆக வேண்டும். அவ்வாறு உழைக்கும் படி இயற்கையின் விதிகள் நம்மை நிர்ப்பந்திக்கும். கலியுகத்தின் இறுதி நாட்களில் (அதாவது தற்காலத்தில்) ஒரு துண்டு ரொட்டிக்காக மனிதர்கள் கழுதைகளைப் போல் மிக கடுமையாக உழைக்க நேரிடும். இந்த வாழ்வு முறை ஏற்கனவே ஆரம்பமாகி விட்டது. ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே போகும் ஊதியத்திற்காக மேலும் மேலும் கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.ஆனால் மனிதர்கள் மிருகங்களைப் போல் கடினமாக உழைப்பதற்கு ஏற்பட்டவர்கள் அல்லர். ஒருவன் தான் மனிதனாகப் பிறந்ததால் ஏற்பட்டுள்ள கடமையை நிறைவேற்றத் தவறினால் அவன் இயற்கையின் விதிகளின் படி கீழ் நிலை உயிர் வடிவை ஏற்கும் நிர்பந்தத்திற்குள்ளாகிறான்.பெளதிக உலகில் ஜட இன்பங்களை அனுபவிப்பதற்காக இயற்கையின் விதிகளின் படி ஆன்மா எவ்வாறு அதற்குத் தகுதியான உடலையும் புலனுறுப்புகளையும் பெறுகிறதென்பதை பகவத் கீதை மிகத் தெளிவாக விளக்குகிறது.


இது பக் 16 வரை...

தொடரும்.....


5 comments:

சசிகலா said...

தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

அனைவருக்கும் அன்பு  said...

அருமையான கருத்துக்களை முன் வைகிறீர்கள் தொடர்வது தான் சிரமம் ..............வாழ்த்துக்கள்

யசோதா.பத்மநாதன் said...

நன்றி சசிகலா. அவசியம் வந்து பார்க்கிறேன்.

சரளா, உண்மை தான்.

எழுதுகின்ற போது இன்னும் தெளிவாக என் மனதிலும் அது பதிவதை உணர்கிறேன். அது இன்னொரு விதமான அனுபவமாக இருக்கிறது.

சகோதரிகள் சசிக்கும் சரளாவுக்கும் என் அன்பும் நன்றியும்.

நிலாமகள் said...

நம் அமைப்பின் இயல்பில், நாம் பிறருக்குச் சேவை செய்வதற்காக ஏற்பட்டவர்கள் //

உயர் நிலையில் உள்ள அதிகாரி சாதாரண குமாஸ்தாவை விட அதிகமான பொறுப்புள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டியவராய் இருக்கிறார்.
அது போலவே, எப்போதும் வயிற்றுப் பசிக்காக இரை தேடுவதிலேயே கருத்தைச் செலுத்தும் மிருகங்களை விட மனிதன் மிக உயர்ந்த கடமைகளை நிறைவேற்ற வேண்டியவனாய் இருக்கிறான்//

ஒருவன் தான் மனிதனாகப் பிறந்ததால் ஏற்பட்டுள்ள கடமையை நிறைவேற்றத் தவறினால் அவன் இயற்கையின் விதிகளின் படி கீழ் நிலை உயிர் வடிவை ஏற்கும் நிர்பந்தத்திற்குள்ளாகிறான்.//

த‌ன்னை அறிய‌த் த‌ன‌க்கொரு கேடில்லை!

யசோதா.பத்மநாதன் said...

/த‌ன்னை அறிய‌த் த‌ன‌க்கொரு கேடில்லை!/

சரியாகச் சொன்னீர்கள் நிலா.நம்மை நாம் அறிந்து கொண்டு விட்டால் பாதி வெற்றி நம் கையில்.

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில்..... பாடலைத் தந்து செல்கிறது உங்கள் வரி நிலா.