Friday, January 14, 2011

தத்துவத்தின் தார்ப்பரியமும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும்


தமிழன் வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்தது மாத்திரமல்ல பிரபஞ்சத்தின் ரகசியம் பற்றிய தேடலுக்கும் தன் வாழ் நாளில் இடம் ஒதுக்கி இருந்திருக்கிறான்.உலகம் பஞ்சபூதங்களால் ஆனது என்பதைக் கண்டறிந்தது மாத்திரமல்லாது;உடலும் அவ்வண்ணமே பஞ்சபூதங்களால் ஆனது என்பதை கண்டறிந்து சொன்னதன் காலம் தொல்காப்பியரின் காலமாகும்.

தொல்காப்பியர் அதனை “நிலம்,தீ,நீர்,வளி,விசும்போடைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” (86) என்று குறிப்பிடுகிறார்.புறநானூற்றின் 87வது பாடல் “அனுச்செறிந்த நிலனும் அந் நிலத்தின் ஓங்கிய ஆகாயமும் அவ் ஆகாயத்தைத் தடவி வரும் காற்றும்,அக் காற்றின் கண் தலைப்பட்ட தீயும்,அத் தீயோடு மாறு பட்ட நீருமென ஐவகைப் பெரிய பூதத்தினது தன்மை போல”என்று குறிப்பிடும்.

இவ் ஐம் பெரும் பூதங்களை அடிப்படையாகக் கொண்டு ஐம் புலன்களும் அவற்றை நுகரும் பொறிகளும் உண்டாகின்றன என்று பரிபாடல் குறிப்பிடுகின்றது.

“சுவைமை யிசைமை தோற்ற நாற்ற மூ
றவையு நீயே யடு போ ரண்ணால்
அவையவை கொள்ளுங் கருவியு நீயே
முத்தியாங் கூறிய வைந்தனுள்ளும்
ஒன்றனிற் போற்றிய விசும்பும் நீயே
இரண்டி ணுணருந் வளியு நீயே
மூன்றி னுணருந் தீயு நீயே
நான்கி னுணரு நீரு நீயே
ஐந்துடன் முற்றிய நிலனு நீயே”.

இதே விழிப்புணர்வு சங்கமருவிய காலத்திலும் நிலைத்து நின்றிருக்கின்றது என்பதற்குத் திருக்குறளில் வரும் “சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் .... “(குறள் 106) என்பதும்;கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்....” (குறள் 90)என்ற குறள் அடையாளம் கூறி நிற்கிறது.

இப் பூமியில் இருக்கும் பஞ்சபூதத்தின் அனைத்து வடிவங்களாலும் உருவானதே மனித உடலும் என்பதை சட்டமுனி ஞானம் சிறப்பாக விதந்துரைக்கும். அது நம் உடலானது பஞ்சபூத மயமானது என்பதையும் அண்டத்தில் இருக்கும் ஆற்றலுக்கும் நாம் கொண்டிருக்கும் உடலுக்கும் தொடர்பு இருப்பதால் அண்டம் வேறு பிண்டம் வேறு என்னும் பாகுபாடு இயற்கை நியதியில் இல்லை என்பதை கீழ்வருமாறு உரைக்கிறது.

“அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்து தான் பார்க்கும் போதே”

என்கிறது.நம்முடைய கால்கள் பூமியை எப்போதும் தொட்ட வண்னமாக உளளன. மூச்சுக் காற்றைக் கணம் தவறாது சுவாசித்தவாறே இருக்கிறோம்.மூச்சினை நாம் நிறுத்துகின்ற போது உடல் வெறும் சடலமாகி விடுகிறது. அப்படி இருக்கும் போது இந்த இயற்கையில் இருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று எவ்வாறு சொல்லிக் கொள்ள முடியும்? அவ் இயற்கை எம்மைத் தன்னோடு தொடர்பறா வண்ணம் பிணைத்து வைத்திருக்கிறது.

அந்த இயற்கையையே நாம் கடவுள் என்கிறோம்; விதி என்கிறோம்.பிறக்கின்ற போது நாம் விட்ட முதல் மூச்சில் எழுதப் பட்டு விட்டது நம் வாழ்வு.பிணைக்கப் பட்டு விட்டது நம் சரீரம்.சோதிடம் கூட அதிலிருந்து கணிக்கப் படுவது காண்க.

இந்தப் பின்னணியை நன்கு அறிந்து கொண்டு அது பற்றி ஆராய்ந்தவர்களாக சித்தர்களும் சான்றோர்களும் விளங்கி இருக்கிறார்கள். அது பற்றிய சிந்தனைகளுக்கு தம் வாழ்நாளை ஒதுக்கி இருக்கிறார்கள்.அதிலிருந்து தான் அவர்கள் ஆண்ம தத்துவத்தைக் கண்டறிந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.அவர்கள் தாம் வேறாகவும் தம் உடல் வேறாகவும் கண்டு தெளிந்திருக்கிறார்கள்.அதனை அவர்கள் தெளிவாகக் கண்டு கொண்டதனால் தாம் வெளியில் நின்றவாறே தம் உடலை அது புரியும் செயலை வேடிக்கை பார்க்கும் வல்லபம் கை வந்திருக்கிறது.

அதுவே வளர்ந்து பின்னாளில் தியானமாக உருவெடுத்திருக்கிறது.

அவர்கள் உடம்பை எவ்வாறெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்று சின்னதாகச் செய்த சோதனையில் சுவாரிசமான விடைகள் பல வந்து சேர்ந்தன.‘ஊன் பொதி’ என்றும்(120) சஞ்சாரப் பிரேதம்’(60)என்றும் விவேக சிந்தாமணி உடலை வர்ணிக்கிறது.’ஊன் தடி’ என்று புறநானூறு (74) கூறுகிறது.’என்பு தோல் போர்த்த உடம்பு’ என்கிறது குறள்,’காற்றடைத்த பை’ என்பர் சித்தர்.’ஊன் நிறைந்த காயம்’ என்றும்; ’மலசலங்கள் பாயும் புழுக் கூடு’ என்றும் பத்திரகிரியார் என்ற சித்தர் கூறுகிறார்.’ஊத்தைச் சடலம்’ என்றும்;’ஐந்து பேர் சூழ்ந்திடும் காடு’ என்றும் கடுவெளிச் சித்தர் பார்க்கிறார்.’ஆபாசக் கொட்டில்’ என்பார் பட்டினத்தார்.எம்மோடு வாழ்ந்த கண்ணதாசன் அதனை இன்னும் பலவாறாக வர்ணிப்பார். இமயமலைக் காடுகளில் தேடினால் இன்னும் பல அற்புதங்கள் கிட்டும்.ஞானியர் பலர் ஞான நிஷ்டையில் அங்கிருக்கிறார்கள்.ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்மீகத் தேடல் நமக்குள்ளும் ஆரம்பமாகிறது.

இப்படிப் பலரும் பலவாறு உடலைப் பாக்கின்ற போதும்;உடலை நாம் தற்காலிகமான ஒன்றாக ஆத்மாவைத் தாங்கி நிற்கும் ஒரு கவசமாக நாம் பார்ப்பதில்லை.ஆண்மா ஒன்றே நிலையானது என்பதையும் பிணி, மூப்பு, சாக்காடு என்பவற்றால் அழியக் கூடியது இந்த உடல் என்றும்;உயிர் என்ற ஒன்றே பல்வேறு தோற்ற வேறுபாடுகளைக் கொண்ட உடல் என்ற சட்டையைப் போட்டிருக்கிறது என்பதையும் நாம் கண்டு கொண்டு விட்டால் ஆன்மாவுக்கு உணவளிக்கின்ற பிரதான விடயங்களில் நாம் ஈடுபடக் கூடும்.

அந்த நிலையை நாம் எட்டி விட்டால் உலகில் உள்ள சகல ஜீவராசிகளையும் ஒன்றாக நாம் கருத வரும்.எல்லோரிடமும் எல்லாவற்றிலும் நேசம் பிறக்கும்.சாத்வீகமும் சமாதானமும் நம்மில் நிலவும்.புலன்கள், தற்காலிகங்களைத் தள்ளி வைத்துப் பார்க்கப் பழகும்.உலக நாடகத்தைத் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்போம்.இயற்கையின் பாசையை மொழி பெயர்ப்பது கூட சாத்தியப் படும்.பிரபஞ்சத்தின் ரகசியம் புரியும்.அன்பு மயமான சேவையில் மனம் நிறைவு கொள்ளும்.பற்றுக்களோடு பற்றற்ற வாழ்வு சாத்தியப் படக் கூடும்.நிரந்தர செல்வம் எதுவென்று நாம் கண்டுணர்ந்து வாழ்தலும் வசப்படக் கூடும்.

ஒரு முறை வேர்களைத் தேடி என்ற வலைப்பூவில் ஒரு சிறு சம்பவம் ஒன்று சொல்லப் பட்டிருந்தது. அதனை அப்படியே இங்கே தருகிறேன்.

“இளந்துறவி தன் குருவிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.

‘குருவே நான் புகை வண்டியில் இடம் கிடைக்காது பாதையில் அமர்ந்து வந்தேன்.அப்போது என்னைக் கடந்து சென்றவர் என்னை மிதித்து விட்டார்.கோபம் கொண்ட நான் அவரைத் திட்டி விட்டேன்.கோபத்தை அடக்க முயன்றும் என்னால் இயலவில்லை ஏன்? என்றார்.

குரு கூறினார்;


நீ வேறு; உன் உடல் வேறு என்ற எண்ணம் எப்போது உனக்குத் தோன்றுகிறதோ அப்போது உன்னால் முதிர்ந்த நிலை அடைய முடியும் என்றார்”.


உண்மை தானே!

எல்லோருக்கும் என் மனமார்ந்த தைத் திருநாள் வாழ்த்துக்கள்!

(குறிப்பு;-வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட விதம் இது.உங்களுக்கு இதில் மாறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் இருந்தால் தயங்காமல் எனக்கு அறியத் தாருங்கள்.அது நான் வளர உதவும்)

(தமிழ்முரசு அவுஸ்திரேலியாவுக்காக எழுதியது.பிரசுரம் 17.01.11)

Sunday, January 2, 2011

ஜைனம் சொல்கிறது




அறிவெனப் படுவது துன்பம் துடைத்தல்!
செறிவெனப்படுவது மும்மையும் செறிதல்!
ஆண்மை எனப் படுவது ஐம்புலன் வெல்லல்!
கேண்மை எனப் படுவது கெட்ட இடத்து உதவல்!
அருமை எனப்படுவது அறநெறி வழுவாமை!
பெருமை எனப்படுவது பிறன் இல் விளையாமை!
அறம் எனப் படுவது ஆருயிர் ஓம்பல்!
உறவெனப் படுவது உற்றுழி நிற்றல்!
வாய்மை எனப் படுவது வருந்தாது உரைத்தல்!
தூய்மை எனப் படுவது உள்ளத் தூய்மை!

-சீவ சம்போதனை என்ற ஜைன சமய நூலில் சிரோணிக மகாராசன் கூறும் அறிவுரை இது.-

ஆதாரம்; மு.அருணாசலம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு - பதினாறாம் நூற்றாண்டு’

நன்றி; அறிவுக்கு ஆயிரம் வாசல்; ரா.கி.ரங்கராஜன்.